சுஜீந்தன் பரமேஸ்வரம்பிள்ளை, நீதுஜன் பாலசுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: அந்திவானம் பதிப்பகம், மானிப்பாய் வீதி, 1வது பதிப்பு, சித்திரை 2016. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1 மானிப்பாய் வீதி).
(13), 14-303 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-3954-00-8.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனான சுஜீந்தன், மொரட்டுவை பல்கலைக்கழக மாணவனான நீதுஜன் ஆகியோரின் கைவண்ணத்தில் உருவான இந்நூல் வரலாற்றுப் புகழ் மிக்க தமிழ் அரசர்களின் பெருமையையும் தமிழர் வரலாற்றையும் எடுத்துக்கூறும் கதையாகும். தமிழர் வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு சுவைபடக்கூறும் வரலாற்றுப் புனைகதை இதுவாகும். தமிழின் நெடுந்தொல் வரலாற்றின் முக்கிய புள்ளிகளைக் கொண்டு மறந்து வருகின்ற தடங்களைக் கற்பனை கலந்து இணைத்து, பதிய நடையில் நயம்பட ஒரு புதினமாகப் புனைந்து வழங்கியுள்ளார்கள். புனல் கடந்தொலித்த தமிழ் – இறந்த காலம் (தீந்தொடைச் சீறியாழ்ப் பாணனின் பாடல், புனல் பெயர்த்த தமிழ், அரசிழந்த தமிழ்), நீரடித் திருண்ட தமிழ் – நிகழ்காலம் (உறைபனி: வீரன் சாவும் நீரின் சாபமும், உருகுதுளி: எளியவன் வாழ்வை மறுக்கும் தண்ணீர், அருவி: சுன்னாகக் குடிநீர், ஆழி: முல்லையின் மத்தியில் நெய்தலின் கரு), கடல் கிழித்தெழுந்த தமிழ்- எதிர்காலம் (ஆழி நூலைத் தேடி யாழில் பயணம்) ஆகிய மூன்று அத்தியாயங்களில் இந்நாவல் விரிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 250092).