11821 ஆதிரை: நாவல்.

சயந்தன். சென்னை 51: தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், 1வது பதிப்பு, நவம்பர் 2015. (சென்னை 14: ஆர். கே. பிரிண்ட்ஸ்).

664 பக்கம், விலை: இந்திய ரூபா 580., அளவு: 23×14.5 சமீ., ISBN: 81-87641-47-9.

2011இல் வெளிவந்த ஆறாவடு- சயந்தனின் முதலாவது நாவல். ஏற்கெனவே அர்த்தம் (2003), பெயரற்றது (2013) ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளையும் வழங்கியவர். ஆதிரை இவரது இரண்டாவது நாவலாகும். ஈழத்தமிழர் வரலாற்றில் விடுதலைப் போராட்டக் களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின் வாழ்க்கைச் சித்திரம் இது. ஈழத் தமிழர்களுடைய போராட்டத்தின் துயர முடிவின் காரணமாக அவர்களுடைய வாழ்வில் இனி உய்வு ஏதுமில்லை என ஆதிரை நிறுவ முற்படவில்லை.  போராட்டம் அழிந்துவிட்டது. ஆகையால் இனி உங்கள் எல்லோருக்கும் சவக்குழிதான் மிச்சம் என்ற இருண்மையை அவர்களுக்கு வழங்கவும் முற்படவில்லை. மனித வாழ்வு எந்தப் பாதாளத்திலிருந்தும் மேலெழும் வேட்கையை பிறப்பிலிருந்தே கொண்டிருக்கிறது என்பதை  ஆதிரையின் மாந்தர்கள் மூலம் நிறுவ முயன்றிருக்கிறார். தம் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைகளைச் சேகரித்துக் கொண்டே அம்மக்கள் வருகிறார்கள். அவை அழிய அழிய சற்றும் மனம் தளராது மீளக் கட்டுகிறார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னரும் கூட, முகத்தில் அறையும் காலத்தின் யதார்த்தத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் தம் வாழ்வை நகர்த்தவே முற்படுகிறார்கள். அவர்கள் தமக்கான குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். அவர்கள் தம் குழந்தைகளுக்கு ஊஞ்சல் கட்டுவார்கள், கிலுகிலுப்பைகளை வாங்கிக்கொடுப்பார்கள். ஆம், அவர்கள் வாழ்வார்கள் என்கிறார் இந்நாவலாசிரியர். ஆதிரையைப் பொறுத்தவரை போர்க்கால வரலாற்றுச் சம்பவங்களுக்குப் புறம்பாக அதிலொரு வாழ்வை சயந்தன் கட்டியமைக்க முயன்றிருக்கிறார். மனித வாழ்வின் உறவுகள், உறவுகளின் சிக்கல்கள், மனதின் அலைச்சல்கள், அந்த மனத்தின் முன்னுக்குப் பின்னான முரண்கள், தாய்மையின் விழுமியங்கள் இவ்வாறாக முட்டி மோதுகின்ற மாந்தர்களை உருவாக்கி ஆதிரையில் அலையவிட்டிருக்கிறார். ஆதிரை என்ற இந்த நாவலிலிருந்து யுத்தத்தையும் அது ஏற்படுத்திய அழிவையும் நீக்கிவிட்டாலும் கூட ஒரு வாழ்வுச் சுழி அதற்குள் எஞ்சியிருக்க வேண்டுமென்று முயற்சித்திருக்கிறார். சயந்தன் யாழ்ப்பாணம், சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்து போர்க்கால வாழ்வின் வழியே இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர். பின்னர், வன்னியிலிருந்து மீண்டு புலம்பெயர்ந்தவர். சுவிற்சர்லாந்தில் தற்போது புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.

ஏனைய பதிவுகள்