செ.குணரத்தினம். மட்டக்களப்பு: செ.குணரத்தினம், அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (மட்டக்களப்பு: எவர்கிறீன் அச்சகம்).
ix, 94 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4320-30-7.
மட்டக்களப்பு பிரதேசம் சார்ந்த கிராமத்து மக்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு நாவல்களை வழங்கும் படைப்பாளிகளில் செ.குணரத்தினம் முக்கியமானவர். ஏற்கெனவே தெய்வ தரிசனம், துன்ப அலைகள், ஒரு கிராமம் தலைநிமிர்கிறது ஆகிய நாவல்களைத் தந்தவர். இந்நாவல் நாவலடிக் கிராமத்தை முக்கிய களமாகக் கொண்டு இயங்குகின்றது. வலப்புறம் வங்காள விரிகுடாவையும் இடப்புறமாக மட்டக்களப்பு வாவியையும் கொண்ட இக்கிராமத்தின் வாழ்வாதாரம் மீன்பிடித்தலாகும். கிராமத்தின் கடலாட்சி அம்மன் ஆலயம், மீன்பிடிப் பயிற்சி நிலையக் கட்டிடம், சிறிய பாடசாலை என்பன இக்கிராமத்தின் 300 குடும்பங்களின் வாழ்வின் அம்சங்கள். இக்கிராமத்தின் ததரூபமான நுணுக்கமான சித்திரிப்புகளுடன் இக்கிராமத்து மீனவ சமூகத்தின் 2004ம் ஆண்டு சுநாமிப் பேரழிவுக் காலகட்டத்தின் அன்றாட வாழ்க்கையினூடாக நாவல் விரிகின்றது.