ஜே.வஹாப்தீன். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, நவம்பர் 2015. (திருக்கோணமலை: சண் பிரின்டர்ஸ், 224, மத்திய வீதி).
xii, 85 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4628-14-4.
ஒலுவில் வஹாப்தீன் எழுதியுள்ள இந் நாவல், இதுவரையும் இம்மாவட்ட ஆக்க இலக்கியங்களின் வழியாக அதிகளவில் பேசாப் பொருள்களைப் பேசுகின்றது. பேசிய பொருள் பற்றியும் பேசுகின்றது. பேசாப் பொருள் என்ற விதத்தில் ஒலுவில் பிரதேசத்தில் உருவாகியுள்ள துறைமுகத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் இந்நாவலில் ஆழமாக அலசப்படுகின்றன. அதன் உருவாக்கம் பற்றிய கனவுகள் வேறுவகையானவை. நனவில் இப்போது நிகழ்கின்றனவும் எதிர்காலத்தில் நிகழப் போகின்றனவும் வேறு வகையானவை. ஒலுவில் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகத்தினால் அம்மக்களும், மீனவர்களும் அடைந்துள்ள இழப்புக்கள், அவலங்கள் இந் நாவலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஒலுவில் கிராமத்தின் மீனவர் வாழ்வியலை கிராமிய வழக்காறுகளோடும், நாட்டார் பாடல்களோடும் அப் பிரதேசத்தின் மொழியில் எழுதப்பட்டதே கலவங்கட்டிகள் நாவல் ஆகும். ஆக, ஒலுவில் துறைமுகம் சார்ந்த எதிர்பார்ப்புக்கள் கலவங்கட்டிகளாகிவிட்டமை பற்றி இந்நாவல் ஆழமாக முதன்முறையாக அலசுகின்றது. மேற்கூறிய அரசியல் பொருளாதார சமூகப் பிரச்சினைகளோடு இயல்பான முறையிலும் சுவையான விதத்திலும் காதல் கதையொன்று இந்நாவலில் சொல்லப்படுகின்றது. சாதரண தொழிலாளியின் மகளுக்கும் முதலாளியின் மகனுக்குமிடையிலான காதலே இந்நாவலில் சொல்லப்படுகின்றது. தேவைக்கேற்ப பல நாட்டார் பாடல்கள் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. தேசிய ‘பெயாவே இலக்கிய விருது’ வழங்கும் அமைப்பு காலி கோட்டை ஹெரிடேஜ் விலாவில் 2017இல் நடாத்திய விருது வழங்கும் விழாவில் கவிஞர், அறிவிப்பாளர் ஜே.வஹாப்தீன் எழுதிய இந்த நாவலை சிறந்த நாவலாகத் தெரிவு செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ‘பெயாவே விருது’ வழங்கிக் கௌரவித்திருந்தது.