மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). மாங்குளம்: மலரன்னை வெளியீடு, மலராலயம், கொல்லர் புளியங்குளம், 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: ஆரு கிறின்டேர்ஸ், 453, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு).
x, 145 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-43209-1-8.
கச்சாயில் இரத்தினம் என்னும் பழம்பெரும் எழுத்தாளரின் புதல்வியான மலரன்னை தன் மகனின் வாழ்வை அவன் மறைந்து 24 ஆண்டுகளின் பின்னும் நினைவு குலையாமல் ஒரு நாவலாகப் படைத்திருக்கிறார். ஈழத்துப் போர் இலக்கியத்துக்கு ‘போர் உலா’ என்ற நுலைத் தந்த மலரவன் என்ற ஈழவிடுதலைப் போராளியின் கதையே இந்நாவல். அப் போராளியின் சிறுவயது முதல் பின்னாளில் அவன் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபாடுகொண்டு, ஒரு போராளியாகி மாவீரனானது வரையில் அவனது வாழ்வின் பல்வேறு சம்பவங்களையும் இதய சுத்தியுடன் பாசாங்கின்றிப் பதிவுசெய்திருக்கிறார் மலரன்னை. ஒரு போராளிக் குடும்பத்தின் சமூகவியல் வாழ்வியல் ஆய்வுக்கு இந்நாவல் துணைபுரியும். 1990களில் இருந்து எழுதத் தொடங்கிய மலரன்னை வேர் பதிக்கும் விழுதுகள், கீறல் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எமக்கு வழங்கியவர். கூட்டுக் குடும்பத்தில் சிறப்பாக வளர்க்கப்படும் ஆண்பிள்ளைகள் நால்வரில் இளைய மகன் விடுதலைப்போராட்டத்தின்பால் பெருவேட்கையுற்று அந்த வழியில் பயணிக்கிறான். படித்துப் பட்டம்பெற வேண்டியவன் தன் பாதையை மாற்றி விடுதலைப் போராளியாகிறான். அவனது வாழ்வே இக்கதையாகும்.