நுணாவிலூர் கா.விசயரத்தினம். லண்டன்: Wijey Publication, 35, Southborough Road, Bickley, Bromley, Kent,1வது பதிப்பு, 2016. (சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர்).
xxii, 138 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-0-9575862-3-9.
தமிழ் மொழிக்கு இலக்கண வரம்பை வழங்கிய முதல் நூலாக தொல்காப்பியம் கருதப்படுகின்றது. அகத்திய மாமுனிவரால் ஆக்கப்பட்ட அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை அடியொற்றியே அவரது தலைமைச் சீடரான தொல்காப்பியரால் தொல்காப்பியம் எழுதப்பட்டது. முதலாம் தமிழ்ச்சங்கம் இருந்த பிரதேசம் கடல்கோளினால் அழிக்கப்பட்டபோது அகத்தியமும், அக்காலத்தைய தமிழ் நூல்களும் இல்லாது போயின. இந்நிலையில் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியமே இன்று கைக்கெட்டிய முதலாவது தமிழ் இலக்கண நூலாக எம்மிடையே வாழ்கின்றது. தொல்காப்பியம் இலக்கண நூலாக வகைப்படுத்தப்பட்டபோதிலும், அதிலும் இலக்கியச் சுவை பெரிதும் காணப்படுகின்றது. இந்நூலாசிரியர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள், தொல்காப்பியத்தில் காணப்படும் இலக்கியச் சுவை பற்றியும் பிற சங்ககாலத் தமிழ் நூல்களின் சிறப்புகள் பற்றியும் இக்கட்டுரைகளில்; குறிப்பிடுகின்றார். சங்ககாலத்தில் தமிழகத்தில் நிலவியிருந்த சமூக அமைப்புகள், ஒழுக்க விழுமியங்கள், தனிமனிதப் பண்புகள், கைக்கிளை, பெருந்திணை என்று ஏராளமான விடயங்கள் இந்நூலில் எளிமையான நடையில் வாசித்து வியக்கமுடிகின்றது. அறிவியல் பேசும் சங்க இலக்கியங்கள், மகளிர் மாண்பை மேம்படுத்திச் சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியர், சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மடலேறும் தலைவன், பண்டைத் தமிழரின் திருமணங்களும் பந்தி போசனமும், சங்க இலக்கியங்கள் காட்டும் பிரிவொழுக்க முறைகள், தலைவன் தலைவியர் உடன்போக்குக் காட்டும் சங்ககால இலக்கியங்கள், வாழ்வியல் வாய்ப்புக்கு வழி சமைத்தோர், களவழி நாற்பது விளக்கும் மறமேம்பாடு, புத்துணர்வும் புதுவாழ்வும் பேசும் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம், கதை கண்டே காப்பியங்கள், மக்கள் வாழ்வியல் பேசும் சீவகசிந்தாமணி, சங்க இலக்கியக் களவியற் பாடல்கள் வெளிக்கொணரும் அம்பலும் அலரும், தொல்காப்பியத் திணைகள் துறைகள் தூவும் தனிச்சிறப்பும் திகைப்பும் எனப் 13 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் நுணாவிலூர் கா.விசயரத்தினம், வடபுலத்தில் சாவகச்சேரி, நுணாவிலைப் பிறப்பிடமாகக்கொண்ட நூலாசிரியர், கணக்காய்வுத் திணைக்களத்தில் பணியாற்றி 1991இல் ஓய்வுபெற்றவர். 07.10.2017இல் லண்டனில் மறைந்த இத்தமிழறிஞர் எழுதிய இறுதி நூலாக இந்நூல் அமைந்துள்ளது.