பிரேமிள் (இயற்பெயர்: தருமு சிவராம்). தமிழ்நாடு: லயம் வெளியீடு, நகலூர், அந்தியூர் 638501, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1996. (சென்னை 600 005: மணி ஆப்செட், 112, பெல்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி).
46 பக்கம், விலை: இந்திய ரூபா 15.00, அளவு: 21×13 சமீ.
தருமு சிவராம் (1939-1997) என்றழைக்கப்பட்ட பிரேமிள், 20.04.1939-ல் இலங்கையில் திருக்கோணமலையில் பிறந்து வளர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து, பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள காரைக்குடியில் 6.01.1997-ல் மறைந்தார்.
தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த ‘எழுத்து’ என்ற பத்திரிகையில் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளராகவே மதிக்கப்பட்டார். இலங்கை எழுத்துலகமும் அவ்வாறே இவரைக் கணித்து வந்துள்ளது.
நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள் என்று தமிழகத் திறனாய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமைபடைத்தவர். இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும். பிரேமிள் அவ்வப்போது எழுதிய இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளில் சில இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17033).