ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை (மூலம்), சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் (பதிப்பாசிரியர்). கொழும்பு: நவரத்தினம் அசோகன், தலைவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, ஆனி 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி).
687 பக்கம், விலை: ரூபா 2700., அளவு: 28×21 சமீ., ISBN: 978-955-8506-02-8.
2015இல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 125ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடியது. 125ஆவது ஆண்டு விழா வெளியீடாக 2017இல் இந்நூல் வெளிவந்துள்ளது. ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நீண்டகாலம் (1912-1947) ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதேவேளையில் அன்றைய யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பத்திரிகையாக வலம்வந்த இந்து சாதனத்துக்கு 1912இலிருந்து உதவி ஆசிரியராகவும், 1921இலிருந்து 1951 வரை பிரதம ஆசிரியராகவும் இருந்து அதனை வழிநடத்தியவர். இத்தொகுப்பில் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை அவர்களின் பெரும்பாலான படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘ஓம் நான் சொல்லுகின்றேன்’ என்ற சிறுகதையில் தொடங்கி, இந்துசாதனத்திலிருந்து அவர் ஓய்வுபெற்றவேளை எழுதிய ‘விடைபெற்றுக் கொள்ளுகிறேன்’ ஈறாக இத்தொகுப்பு வடிவiமைக்கப்பட்டுள்ளது. அவரது எழுத்துக்கள் உலகம் பலவிதம், உலகம் பலவிதக் கதைகள், என்ற பத்திகளாகவே வெளிவந்ததால் இந்நூலுக்கும் அத்தலைப்பினை இட்டுள்ளனர். இந்நூலின் முதற்பாகத்தில் உதிரிகளாக வெளிவந்த அவரது சிறுகதைகளும், நூலாகக் கிடைக்கக்கூடியதாகவிருந்த கோபால-நேசரத்தினம் நாவலும் இடம்பெறுகின்றன. இரண்டாம் பாகத்தில் 1922இலிருந்து 1936வரை பெரும்பாலும்அரசியல், சமூகம், சமயம் தொடர்பாக எழுதப்பட்ட பத்திகளும், மூன்றாம் பாகத்தில் 1944-1946 காலப்பகுதி தொடர்நாவல்களும் நான்காம் பாகத்தில் 1947-1951 காலப்பகுதி தொடர்நாவல்களும் வருகின்றன. இத்துடன் மூன்று பின்னிணைப்புகளும் நூலின் இறுதியில் உள்ளன.