பொ.கருணாகரமூர்த்தி. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001: 1வது பதிப்பு, மே 2014. (சென்னை 600086: கொம்பியூபிரின்ட், பிரிமியர் டிசைன் ஹவுஸ்).
407 பக்கம், விலை: இந்திய ரூபா 550., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-38-7.
யாழ்ப்பாண மாவட்டத்தின்; புத்தூரில் பிறந்த பொ.கருணாகரமூர்த்தி, புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தா கல்லூரியில் கல்வி பயின்றவர். 1980இல் பெர்லினுக்குப் புலம்பெயர்ந்தவர். 1985இல் கணையாழியில் வெளிவந்த ஒரு அகதி உருவாகும் நேரம் என்னும் குறுநாவல் மூலம் பத்திரிகை வாசகர்களுக்கு அறிமுகமானவர். காருண்யன், கொன்ஃபூசியஸ், புதுவை நிலவன், அழகு முருகேசு முதலிய பெயர்களில் அவ்வப்போது கவிதைகளும் எழுதுபவர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் வாழ்ந்து பெற்ற அனுபவத்தினையும், விரிந்து பரந்த தனது சுய வாசிப்பு அனுபவத்தையும் கொண்டு பெர்லின் நினைவுகளை நூலுருவில் பதிவுசெய்கின்றார். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன் கூடிய இவரது எழுத்து வாசகனுக்கு வாசிப்பில் ஈர்ப்பினை ஏற்படுத்துகின்றது. இந்நூலின் முற்பகுதியில் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த சூழலில் தமது வாழ்வை நிலைநிறுத்திக்கொள்ளப் பட்ட கஷ்டங்களையும் பண்ண நேர்ந்த தகடுதத்தங்களையும் எள்ளலுடன் விபரிக்கும் இவர், ஆங்காங்கே பேர்லினின் அழகையும் பொலிவையும் வனப்பையும் சித்திரமாக வாசகர்முன் விரித்து வைக்கிறார். பிற்பகுதியில் தணிக்கையும் புனைவுமின்றி இவர் காட்டும் பெர்லின் இரவு வாழ்க்கையும் ஜெர்மனியரின் மனோவியலும் பழக்க வழக்கங்களும் வெளிப்படையான பாலியல் நடத்தைகளும் மூடுண்ட சமூகத்தவராகிய புகலிடத்துத் தமிழருக்குக் கலாச்சார அதிர்ச்சியை உண்டுபண்ணுவனவாகும்.