இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு. தெகிவளை: திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, 24 சீ, எதிரிவீர அவென்யூ, 1வது பதிப்பு, ஜுலை 2016. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xxviii, 272 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ.
நாயன்மார் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்களாவர். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் – இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார். காலம், குலம், நாடு, இயற்பெயர் – காரணப்பெயர் என பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள். நாயன்மார்களின் வரலாறுகளை ஆய்வு செய்யவும், அவற்றில் உள்ள சேர்க்கைகளையும், உண்மைகளையும் புரிந்து நோக்கவும் இவ்வாறான வகைப்பாடு உதவுகின்றன. நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது. அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இந்நூலில் மேற்படி 63 அருளாளர்களையும் பற்றி 86 தலைப்புகளில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60784).