நீர்வை மணி. நீர்வேலி: ஸ்ரீ கணேசா அறநெறிப் பாடசாலைச் சமூகம், 1வது பதிப்பு, நவம்பர் 2004. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம்).
10 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 21×15 சமீ.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலகம் நீர்வேலி ஸ்ரீ கணேசா அறநெறிப் பாடசாலையின் அனுசரணையுடன் நீர்வேலி ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் ஆலய திருநாவுக்கரசு நாயனார் குருபூசை மடத்தில் நடாத்திய சைவசித்தாந்தப் பெருவிழாவின்போது 11.11.2004 அன்று வெளியிடப்பட்ட சிறுநூல். சைவர்களால் புறச்சந்தான குரவர்கள் எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் மெய்கண்டதேவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாய சிவஞான போதத்தை இயற்றியவர் இவரே. மெய்கண்ட தேவர், திருவெண்ணெய்நல்லூரில் பிறந்தவர். கிபி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான மனவாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த நூலை இயற்றினார். மெய்கண்டதேவர், தனது குருவான பரஞ்சோதியார் உபதேசித்த சிவஞான சூத்திரங்களைத் தமிழில் அருளிச் செய்தார். அதற்கு அவரே வார்திகமும் அருளிச் செய்தார். அந்த நூல் சிவஞான போதம் என்று வழங்கலாயிற்று. (மெய்கண்ட சாத்திரங்களுள் முதலாவதாக விளங்கும் நூல்). அந்த நூலே பிற்காலத்தில் திரு அவதாரம் செய்தருளிய சந்தான ஆசாரியர்களின் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரமான நூலாக அமைந்தது. மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் முத்தியடைந்தார்.