11909 யோக சுவாமிகள் ஐம்பதாவதாண்டுக் குருபூசை மலர்.

எஸ்.வினாசித்தம்பி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எம்.திலகரத்தினம், சிவதொண்டன் நிலையம், 434, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).

(10), 168 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21.5 சமீ.

யோகர் சுவாமிகளின் 50ஆவது ஆண்டு குருபூசை தினம் 01.04.2014 அன்று யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் அனுசரிக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. சிவயோக சுவாமிகள் பற்றியும், அவரது நற்சிந்தனைகள் பற்றியும் பல்வேறு  அறிஞர்கள் எழுதிய 39 தமிழ் ஆக்கங்களுடன் 8 ஆங்கில ஆக்கங்களுமாக மொத்தம் 47 ஆக்கங்கள் இம்மலரை அலங்கரித்திருக்கின்றன. சிவயோக சுவாமிகள் (1872-1964) ஈழத்தில் வாழ்ந்த சைவத் துறவியும் திருக்கயிலாய பரம்பரையில் நந்திநாத சம்பிரதாயத்தில் வந்த குருபரம்பரையின் 161ஆவது சற்குருவும் ஆவார். யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில், அம்பலவாணர்- சின்னாச்சியம்மை தம்பதிக்கு, மே 29 1872இல் மகனாகப் பிறந்த யோகசுவாமிகளின் இயற்பெயர் சதாசிவம் என்பதாகும். இளம்வயதிலேயே தாயாரை இழந்த இவர் கொழும்புத்துறையில் ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் மேற்படிப்பும் கற்றார். கல்வி முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராகப் பணியில் இணைந்து, கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார். 1905இல் நல்லூர்த் தேரடியில், முதன்முதலாக செல்லப்பா சுவாமியைக் கண்ட நாளிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. பின் ஐந்து ஆண்டுகள் அவரிடம் சீடனாக வாழ்ந்தார். கொழும்புத்துறையில் ஆச்சிரமமொன்றமைத்த அவர், நாடளாவிய யாத்திரை செல்வதும், நற்சிந்தனைகளை வழங்குவதுமாக இருந்தார். 1934 டிசம்பரில், அவரால் தொடக்கப்பட்ட சிவதொண்டன் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது. மார்ச் 1964ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் இறைபதமெய்தினார்.

ஏனைய பதிவுகள்