க.சச்சிதானந்தன். தெல்லிப்பழை: க.சச்சிதானந்தன், மாவிட்டபுரம், 1வது பதிப்பு, ஆவணி 1960. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194ஏ, பண்டாரநாயக்க மாவத்தை).
vi, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13 சமீ.
தமிழரசுக் கட்சித் தலைவர் வன்னியசிங்கத்தின் வரலாற்றை ‘தியாக மாமலை’ என்ற நூலாக எழுதியுள்ளார். குமாரசாமி வன்னியசிங்கம் (13 அக்டோபர் 1911 – 17 செப்டம்பர் 1959), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொடக்கக்காலத் தலைவர்களில் ஒருவருமாவார். 1947 முதல் இறக்கும் வரை கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அமரர் கு.வன்னியசிங்கம அவர்களின் தந்தை; தெல்லிப்பழையைச் சேர்ந்த வழக்கறிஞரும் தமிழறிஞருமான வி. குமாரசாமியாவார். வன்னியசிங்கம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று லண்டன் பல்கலைக்கழகப் பட்டத்தை 1933 ஆம் ஆண்டில் பெற்றார். பின்னர் அவர் சட்டத்துறையில் நுழைந்து வழக்கறிஞராகி, யாழ்ப்பாணத்தில் சட்டப்பணியைத் தொடர்ந்தார். அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தினால் தொடங்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூலம் இலங்கை அரசியலில் நுழைந்தார். 1947 தேர்தலில் கோப்பாய்த் தொகுதி வேட்பாளர் பி. ஜி. தம்பியப்பா தேர்தல் பரப்புரை நேரத்தில் காலமானதை அடுத்து வன்னியசிங்கம் அவருக்குப் பதிலாக தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 1948 ஆம் ஆண்டில் கட்சியை விட்டு விலகி தமிழரசுக் கட்சியைச் சா. ஜே. வே. செல்வநாயகம் 1949 டிசம்பர் 18 இல் தொடங்கிய போது அக்கட்சியின் தொடக்கக்காலத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இந்நூலாசிரியர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 – மார்ச் 21, 2008) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். சச்சிதானந்த என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். மாவிட்டபுரத்தில் பிறந்த இவர் மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். 1971 ஆம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தையும், 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். பட்டப் படிப்பை முடித்துக் கொண்ட சச்சிதானந்தன் 1946 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு புனித மேரி கல்லூரியில் கணித ஆசிரியராவும், 1947-1948 காலப்பகுதியில் உடுவில் மகளிர் கல்லூரியில் கணித ஆசிரியராகவும் பணியாற்றினார். 1960 இல் யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரியிலும், பின்னர் 1965 வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் பணியாற்றியபின் 1965 முதல் 1967 வரை அரசினர் பாடநூற் சபையில் பணியில் சேர்ந்தார். 1967 முதல் 1981 வரை பலாலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் உளவியல் விரிவுரையாளராகவும், பின்னர் அதன் உப-அதிபராகவும் பணியாற்றினார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10741).