மலர்க்குழு. கொழும்பு: சேர். பொன்னம்பலம் அரணாசலம் நூற்றாண்டுவிழாச் சபை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1953. (கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை).
46 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
சேர் பொன்னம்பலம் அருணாசலம் (செப்டம்பர் 14 1853 -ஜனவரி 9 1924) அவர்கள் கேட் முதலியார் என அழைக்கப்பட்ட அருணாசலம் பொன்னம்பலம், செல்லாச்சி (சேர் முத்து குமாரசுவாமியின் சகோதரி) ஆகியோரின் மூன்றாவது புதல்வர். குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் சகோதரர். இவரது மனைவியின் பெயர்: சுவர்ணம் நமசிவாயம். பிள்ளைகள்: அருணாசலம் மகாதேவா, சிவானந்தன் அருணாசலம், அருணாசலம் இராமநாதன் ஆகியோர். சேர் பொன்னம்பலம் அருணாசலம் சட்ட நிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்குப் பின் அங்கத்துவம் வகித்தார். அரசாங்க சேவையில் பணியாற்றும் காலத்திலேயே சுயராஜ்ய உணர்வால் உந்தப்பெற்றார். ஓய்வு பெற்ற பின் அரசியல், சமூக, கல்விப் பண்பாட்டுத் துறைகளிலே ஈடுபட்டார். 1919-ம் ஆண்டு இலங்கையருக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதனுடைய முதல் தலைவராக 1919 முதல் 1922 வரை பொன்னம்பலம் அருணாசலம் விளங்கினார். ஆனால் சேர். ஜேம்ஸ் பீரிசும், நு. து.சமரவிக்கிரமவும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அருணாசலம் உட்படத் தமிழ்த் தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகி தமிழர் சீர்திருத்தக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினர். அவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். தானே முன்னின்று உருவாக்கி அதன் முதற் தலைவராக இருந்து இலங்கைத் தேசியக் காங்கிரஸை தாபித்த பின் அதை விட்டு வெளியேறி சேர் பொன். அருணாசலம் அவர்கள் இலங்கைத் தமிழர் கழகத்தைத் (Ceylon Tamil League) தொடங்கினார். பொன் அருணாசலத்தின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும் இந்நூல் அவரது பிறந்ததின நூற்றாண்டு விழாவின் போது 14 செப்டெம்பர் 1953 அன்று வெளியிடப்பட்டது.