ஏ.எச்.எம்.அஸ்வர். தெகிவளை: அஸ்மினா பதிப்பகம், இல. 4, பாதியா மாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (தெகிவளை: ஏ.ஜே.அச்சகம், இல. 44, ஸ்டேஷன் வீதி).
xiv, 133 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-99185-2-3.
கல்முனை மாநகர மேயர், 1947இல் சோல்பரி ஆணைக்குழுவின் சிபாரிசில் உருவாக்கப்பட்ட செனற் சபையின் வாழும் ஒரேயொரு உறுப்பினர், ஜனதா பெருந்தோட்டப் பணிப்பாளர், ஹோட்டல் கூட்டுத்தாபன பிரதித் தலைவர், நிறைவேற்றுப்பணிப்பாளர் – தேசிய வீடமைப்பு அதிகார சபை, சென்னை- இந்தியத் தூதராலயத்தின் முதலாவது செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தவர் மருதமுனை மஷூர் மௌலானா. யேமன் நாட்டில் பிறந்த முன்னோர்களின் வழித்தோன்றலான இவர் கிழக்கிலங்கையில் மருதமுனையைப் புகலிடமாகக் கொண்டவர். கொழும்பு சட்டக்கல்லூரியில் பயின்றவர். சாஹிராக் கல்லூரியில் (பேராசிரியர்) சிவத்தம்பியின் சக மாணவர். இவரைப்பற்றிய வாழ்வும் பணிகளும் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களால் பதிவுசெய்யப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினரான நூலாசிரியர் ஏ.எச்.எம்.அஸ்வர், பாராளுமன்றப் பேரவை உறுப்பினராகவும், முன்னாள் முஸ்லிம் இராஜாங்க அமைச்சராகவும் ஊடக ஆளாட்சி அதிகாரியாகவும் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பணியாற்றியவர். இவரது பார்வையில் மஷ{ர் மௌலானா தமிழரசுக் கட்சியின் பீரங்கிப் பேச்சாளராகவும், தந்தை செல்வாவின் தத்துப் பிள்ளையாகவும், நற்றமிழின் நாயகராகவும், செல்லையா இராஜதுரையின் ஆதரவாளராகவும் இனம்காணப்படுகின்றார்.