பொன். சந்திரசேகரி. நெடுங்கேணி: பொன். சந்திரசேகரி, பெரியகுளம், 1வது பதிப்பு, ஆவணி 2011. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 79, கந்தசாமி கோவில் வீதி).
121 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
வன்னிப் பிரதேசத்தின் கல்வி வாய்ப்பற்ற ஒரு பிரதேசமாக அந்நாளில் இருந்த பெரியகுளம் கிராமத்தில் பிறந்து, திண்ணைப்பள்ளியில் கற்றுத் தமிழ் ஆசிரியராக நல்லூர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சிபெற்று தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கியவர் பொன். சந்திரசேகரி அவர்களாவார். அவரது சுயசரிதை மண்ணோடும் மக்களோடும் பின்னிப் பிணைந்தது. நெடுங்கேணி, முல்லைத்தீவுப் பகுதிகள் சம்பந்தமான பல வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் பொதிந்துள்ளன. 1977இல் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட எக்ஸ். எம். செல்லத்தம்புவை எதிர்த்து தனது 52ஆவது வயதில் சுயேட்சையாகப் போட்டியிட்டவர் இவர். இவரது துணிச்சலும் தமது மண்ணின் மக்களின்மேல் கொண்ட நம்பிக்கையும் பற்றும் இவரை இம்முடிவினை எடுக்கத் தூண்டியிருக்கலாம். தேர்தலில் தோல்வியுற்ற போதிலும், சமூக சேவை நிறுவனங்களில் இணைந்து உண்மைத் தொண்டாற்றி மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க அல்லும் பகலும் உழைத்ததால் மக்களிடையே மிகுந்த செல்வாக்கை இவரால் பின்னாளில் பெற்றுக்கொள்ள முடிந்தது. தன் அயராத சேவையினால் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தை ஒரு மத்திய மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தவும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், விளைபொருள் அபிவிருத்திச் சங்கம் போன்றவற்றை அங்கு நிலைபெறச் செய்யவும் அயராது பாடுபட்டவர். இத்தகையதொரு சமூக சேவகரின் வாழ்வும் பணிகளும் சுயசரிதையாக இங்கு விரிகின்றது.