வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). யாழ்ப்பாணம்: தவமணி வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஜுன் 2016. (யாழ்ப்பாணம்: சிவராம் பதிப்பகம்).
xiv, 182 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41027-1-2.
முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான வரலாற்று நூல். இது உண்மைச் சம்பவங்களை அடுக்கடுக்காகக் கொண்ட வலி சுமந்த மனங்களின் கதையாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் முடிந்துவிட்டதாய் உலகமே பேசிக்கொண்டிருந்த நாட்களில், உயிர் வாழ்வதற்காகப் போராடிக்கொண்டிருந்த ஒரு தொகுதித் தமிழர்களின் உணர்வுகளை இங்கே பதிவுசெய்ய ஆசிரியர் முனைந்திருக்கின்றார். மனதை உருக்கும் கருத்துக்கள், கண்களைக் கலங்க வைக்கும் சம்பவங்கள், ஒரு சில இடங்களில் சில சம்பவங்கள் மனதில் புன்னகையையும் கூட அரும்பவைக்கின்றன. பம்பைமடு வாழ்க்கையின் பல தளங்களையும் பல இயல்புகளையும் தனக்கே உரித்தான எழுத்து நடையில் மிகவும் சாதுரியமாகவும் இலகுவாகவும் 29 அத்தியாயங்களில் விவரித்துச் செல்கின்றார். வெளித்தொடர்புகள் எதுவுமற்ற நிலையில் முன்னாள் பெண் போராளிகளில் ஒரு தொகுதியினர் அடைக்கப்பட்டிருந்த, புனர்வாழ்வு நிலையம் என அரசாங்கத்தால் அழைக்கப்பட்ட பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு பற்றி இங்கே பேசப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் ஓமந்தையில் வைத்து 19.5.2009 இல் போராளிகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள். அவ்வாறு பிரிக்கப்பட்ட ஒரு தொகுதிப் பெண் போராளிகள் 21.05.2009 இல் பம்பைமடு தடைமுகாமில் அடைக்கப்பட்டார்கள். ஓமந்தையிலிருந்து பம்பைமடு தடுப்பு முகாமிற்குச் சென்று அங்கிருந்து 06.04.2010இல் வெற்றிச்செல்வி விடுதலையானது வரையான ஓராண்டு காலத்தில் நடந்தவற்றை இங்கு பதிவுசெய்துள்ளார். ஈழப்போரின் இறுதி நாட்கள் என்ற இவரது முன்னைய நூலின் தொடர்ச்சியாக இந்நூல் அமைந்துள்ளது.