ஆசிரியர் குழு. வவுனியா: மணிவிழாக் குழு, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், 54, கந்தசாமி கோவில் வீதி).
211 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளராகவும், இணைப்பாளராகவும், பீடாதிபதியாகவும் பணியாற்றிய கயித்தான் பெர்ணாட் அவர்களின் மணிவிழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். 14.01.1954இல் பிறந்த இவர் இளவாலை, புளிவளைந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர். இளவாலை, யாழ். புனித ஹென்றியரசர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பட்டப்பின் படிப்பையும் மேற்கொண்டவர். அவுஸ்திரேலியாவின் வூலோங்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் இலங்கையில் அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தின் சாமஸ்ரீ பட்டம், அகில இலங்கை சமாதான நீதவான் பட்டம், மன்னார் தமிழ்ச்சங்கத்தின் நான்மறைக்கோன் பட்டம் ஆகியவற்றையும் பெற்றிருந்தவர். 1982-1984 காலகட்டத்தில் உதவிக் கணக்காளராக நீர்வேலி, சேவி கண்ணாடித் தொழிற்சாலையில் தனது பணியைத் தொடங்கிய இவர், 12.3.1984 முதல் கல்வித்துறையில் இணைந்து, பட்டதாரி வணிக ஆசிரியராக கொழும்பில், அல் குசேனியா முஸ்லிம் மகா வித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் பணியாற்றியவர். கல்வித்துறையில் இலங்கை அதிபர் சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை, உதவிக் கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர் என வளர்ந்து 20.10.1993 முதல் வவுனியா தேசியகல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியாகப் பணியாற்றி வந்தவர். இவரது சேவை நயப்பு மலராக பல்வேறு சமூக, கல்விப்பல பிரமகர்களின் வாழ்த்துரைகளுடன் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.