கம்பளைதாசன்(பதிப்பாசிரியர்). கொழும்பு: முத்தமிழ் மன்றம், 1வது பதிப்பு, மார்ச் 1991. (கொழும்பு: ஸ்ரீ சக்தி பிரிண்டிங் இன்டஸ்ரீஸ்).
(44) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராய், பாரதிக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுள் தகுதியும், சிறப்பும் மிக்கவராய்த் திகழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். இந்திய நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த போது, இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு, இந்திய விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பல பாடல்களைப் பாடியவர் இவர். பாவேந்தர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி புதுச்சேரியில் கனகசபை முதலியார், இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கனக சுப்புரத்தினம் என்பதாகும். 1908இல் பாவேந்தர் சுப்பிரமணிய பாரதியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார். பாரதியாரின் புலமையும், எளிமையும் கவிஞரைக் கவர்ந்தன. பாரதி மீது பற்று மிகக் கொண்டு தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். 1964 ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலிவுற்றார் பாவேந்தர். 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னையில் இயற்கை எய்தினார். 1990இல் தமிழக அரசு கவிஞரின் நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கியது. 1.11.91 முதல் இவை மக்களின் உடைமையாகும் என்றும் அரசு அறிவித்தது. ஆண்டுதோறும், ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று தமிழக அரசு சார்பிலும், புதுவை அரசு சார்பிலும் பாவேந்தரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இலங்கையில் நூற்றாண்டு விழா முயற்சியாகக் கொழும்பு முத்தமிழ் மன்றம் இம்மலரை வெளியிட்டுள்ளது. இதில் சில்லையூர் செல்வராசன் (ஈழத்தின் தனிப் புகழும் இசைத்த பாவேந்தன்), கம்பளைதாசன் (தமிழ் உணர்வூட்டுவோம் தமிழ் வளர்ப்போம்), அ.பொ.செல்லையா (பாரதியை மிஞ்சியவர்), வேலணை வீரசிங்கம்( பெரியார் அண்ணாவின் சிந்தனையைத் தூண்டியவர் பாவேந்தர்), பட்டுக்கோட்டை இராஜேந்திரம் (வள்ளுவராய் மாறிய முகலாய ஓவியம்) ஆகியோரின் கட்டுரைகளும் பாவேந்தர் வாழ்க்கைக் குறிப்பும், மு.கருணாநிதி, பாவேந்தர் ஆகியோரின் கவிதைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10963).