ந.நகுலசிகாமணி, ந.உமா. வல்வெட்டித்துறை: வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம், ஊரிக்காடு, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 204 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-43227-0-7.
இந்நூல், ஆசிரியரின் அகாலமரணமடைந்த இரு புத்திரர்களின் (சந்திரசேகர் நகுலசிகாமணி, சௌமியன் நகுலசிகாமணி) மறைவின் பத்தாவது ஆண்டு நினைவையொட்டி, தமிழிலும் ஆங்கிலத்திலும் (Historical Anecdotes of Sri Lankan Tamils) வெளியிடப்பட்டது. இளைய தலைமுறையினர் ஈழத்தவரின் வரலாற்றை சுருக்கமாக அறிவதற்கு வசதியாக பொருத்தமான புகைப்பட ஆதாரங்களுடன் இதே தலைப்பில் சமயம், வரலாறு, இலக்கியம், சம்பவம், அரசியல் என்பவற்றை மிகச் சுருக்கமாகத் தமிழில் தொடராக எழுதி வெளியிட்டிருந்தார். இவை கனடா உதயன் பத்திரிகையில் 50 வாரங்களாகவும், 2013இல் தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் சாளரம் பகுதியிலும் பிரசுரமாகியருந்தது. அத்தொடரின் அடிப்படையில் அமைந்த நூல்வடிவம் இதுவாகும். யாழ்ப்பாணத் தமிழரசின் மாட்சியும் வீழ்ச்சியும் என்பதில் தொடங்கி, வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம் ஈறாக, 100 தலைப்புகளில் இந்நூலில் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண அரசின் சேது நாணயங்கள், இலங்கை அரசு அன்று வெளியிட்ட தபால் தலை, திருக்கேதீச்சரம், திருக்கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், மடுமாதா, வற்றாப்பளை கண்ணகை அம்மன், இலங்கை முஸ்லிம்களும் தமிழும், கன்னியா வெந்நீரூற்று, கீரிமலையும் நகுலேஸ்வரப் பெருமான் ஆலயமும், வல்லிபுரக் கோயில், கண்டியை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரமராசா, சங்கிலித் தோப்பிலுள்ள நல்லூர் அரச மாளிகை, திருமலைக் கோட்டை என இன்னோரன்ன தகவல்கள் புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.