12013 – இந்து சாதனம் 75ஆவது ஆண்டு நினைவு மலர்(இந்து சாதன எழுபானைந்தாண்டு மலர்).

மு.மயில்வாகனம், மு.வைத்தியலிங்கம், சிவ உ.சோமசேகரம், க. கணபதிப்பிள்ளை, சி.சீவரத்தினம், க.கி.நடராசன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 1வது பதிப்பு, சித்திரை 1967. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை).

(8), 72+18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24X18 சமீ.

‘இந்து சாதனம்’ பத்திரிகை 1889ம் ஆண்டு செப்டம்பர் 11 இலிருந்து யாழ்ப்பாணத்துச் சைவ பரிபாலன சபையினரால், அவர்களது சைவப்பிரகாச அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் உட்புறத்தில் தமிழும் வெளிப்புறத்தில் ஆங்கிலமும் (ர்iனெர ழுசபயn) கொண்ட இருமொழிப் பத்திரிகையாக மாதம் இருமுறை புதன்கிழமைகளில் வெளிவந்தது. ஜூலை 5, 1899 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலப் பத்திரிகை வாரம் ஒரு முறையும், ஜூலை 11, 1906 இலிருந்து தமிழ்ப் பத்திரிகை தனியாக மாதம் இரு முறையும் வெளிவர ஆரம்பித்தன. அதன் பின்னர் ஜூலை 10, 1913 இல் இருந்து ஆங்கிலப் பத்திரிகை மாதமிரு முறையும் தமிழில் வாரம் ஒரு முறையும் வெளிவந்தன. இன்றும் இப்பத்திரிகை வெளிவருகின்றது. ஆரம்பத்தில் ஆங்கிலப் பத்திரிகைக்கு முன்னாள் திருவனந்தபுரம் பிரதம நீதியரசரும் பிரபல கணிதவியலாளரும், ஆங்கிலம், வடமொழி மற்றும் தமிழ் ஆகியவற்றில் புலமை பெற்றவருமான தா.செல்லப்பாபிள்ளை அவர்கள் ஆசிரியராகவிருந்தார். இவர் 1891 இல் சுகவீனம் காரணமாக விலகவே வழக்கறிஞர் ஏ.கதிரவேலு மற்றும் அ.சபாபதி ஆகியோர் ஆங்கிலப் பதிப்புக்கு இணை-ஆசிரியர்களாயினர். ஜூலை 1892 முதல் அ.சபாபதி ஆசிரியரானார். அ.கதிரவேலு தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தார். இவர்களைத் தொடர்ந்து ச.சிவகுருநாதர், தெ.அ.துரையப்பாபிள்ளை, எம்.எஸ்.இராஜரத்தினம், எம்.எஸ்.இளையதம்பி, வி.நாகலிங்கம், ஏ.வி.குலசிங்கம், த.முத்துசாமிப்பிள்ளை என்போர் ஆங்கிலப் பத்திரிகாசிரியர்களாக விளங்கி யுள்ளனர். தமிழ்ப் பத்திரிகைக்கு நவம்பர் 25, 1896 வரையில் ஆசிரியராகவும் பொறுப்பாளராகவும் விளங்கியவர் ஆறுமுகநாவலரின் பெறாமகன் நல்லூர் த.கைலாசபிள்ளை அவர்களாவார். அவரை அடுத்து தமிழ்ப் பத்திரிகாசிரியர்களாகப் பெ. கார்த்திகேசபிள்ளை, எஸ்.கந்தையாபிள்ளை, கு.சிற்சபேசன், மு.மயில்வாகனம் என்போர் விளங்கியுள்ளனர். அ.சபாபதி, நம.சிவப்பிரகாசம் ஆகியோர் இரு பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர். இவ்விரு பத்திரிகைகளும் சைவ சமயம் சம்பந்தமான கட்டுரைகளையும் செய்திகளையும் கருத்துகளையும் தாங்கி வந்தன. சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரஞ் செய்தன. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் முதலிய தேவாரம் பெற்ற திருத்தலங்களின் புனருத்தாரணத் திருப்பணிகளுக்கு இவை அளித்து வந்த ஊக்கம் குறிப்பிடத்தக்கது. இப்பத்திரிகை தனது 75ஆவது ஆண்டு நிறைவினை எய்தியபோது சித்திரை 1967இல் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. இவ்விதழில் என்றும் இளையாய் என வாழ்த்துவம், ஞானதீபம், பாடப் புத்தகங்கள், சைவ பரிபாலன சபையின் தோற்றமும் பணிகளும், ஆசிச் செய்தி, இந்து சாதனமே, அத்வைத விளக்கம், மகிழ்வும் வாழ்வும், சமய தீட்சையின் தாற்பரியம், நிலாவரை என்னும் புத்தூர் இடிகுண்டு, ஐந்தொழில் உண்மை, புளியந்தீவு நாகேசுரர் பதிகம், ஆணை நமதே, கயிலைமலையனைய செந்தில், தென்னாடுடைய சிவன், சைவசித்தாந்தம், யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்வளம், ஒத்துணர்வு, நாவலர் செயல்வன்மை, சிந்தியாத நாம், ஆரியத் தமிழந்தாதி, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் தொழிற்பெயர் வழக்கு, புலவர் பெருமை, தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய தமிழ் ஆக்கங்களும் சில ஆங்கில ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39870).

ஏனைய பதிவுகள்