12055 – சைவக் கிரியைகளும் விரதங்களும்.

தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை: செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாள் அறநிதியம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 2வது பதிப்பு, ஜனவரி 1991, 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

52 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 18×12 சமீ.

‘கிரியை’ என்ற சைவ சமயச் சொல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுஷ்டிக்கப்படும் நியதிச் செயல்கள் என்னும் கருத்தில் சமயப் பிரமாண நூல்களில் வழங்கி வருகின்றது. கருமம், சடங்கு, பூசை என்பனவும் அதே பொருளைத்தரும் சொற்களாகும். சைவ சமயிகளுக்குரிய இத்தகைய கிரியைகள் பற்றி, சிவாகமங்களும் அவற்றைச் சார்ந்த உபாகமங்களும் இவற்றின் அடிப்படையில் எழுந்த பத்ததிகளும் விரித்துக் கூறுகின்றன. கிரியைகள் ஞானத்திற்கு மூலகாரணமாய் வீடு பேறாகிய பரமுத்திப்பேற்றை தரும். சைவக் கிரியை ஆன்மார்த்தக் கிரியை, பரார்த்தக் கிரியை என இரு வகைப்படும். ஆன்மார்த்தம் என்பது தன் நன்மை கருதிச் செய்யப்படும் சந்தியாவந்தனம், சிவபூசை போன்ற கிரியைகளைக் குறிக்கும். பரார்த்தம் என்பது பிறர் நன்மை கருதிச் செய்யப்படும் ஆலய வழிபாடுகளைக் குறிக்கும். இந்நூலில் ஆசிரியர் சைவக்கிரியைகளை திருக்கோயில், திருக்கோயில் வழிபாடு, கோயிற் பண்பாடு, நித்திய நைமித்தியக் கிரியைகள், மகோற்சவம், கும்பாபிஷேகம், வீட்டில் நடைபெறும் கிரியைகள், திருமணக் கிரியை, அபரக்கிரியை, அந்தியேட்டி, சிரார்த்தம் ஆகிய தலைப்புகளின்கீழ் விளக்கி யிருக்கிறார். தொடர்ந்து விரதங்கள் என்ற பகுதியில், விநாயக விரதங்கள் (விநாயக சதுர்த்தி விரதம், விநாயக சஷ்டி விரதம்), சிவ விரதங்கள் (சிவராத்திரி விரதம், ஏகாதசி விரதம், பிரதோஷ விரதம், சோமவார விரதம்), சக்தி விரதங்கள் (நவராத்திரி விரதங்கள், கேதாரகௌரி விரதம், வரலட்சுமி விரதம்), கந்த விரதங்கள் (கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், கந்தசஷ்டி விரதம்), கிரகதோஷ நிவர்த்தி ஆகிய விரதங்கள் பற்றி விளக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17602).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்