சி.அப்புத்துரை, சு.செல்லத்துரை. கொழும்பு 6: வி.மனோன்மணி, யாழ்.தெல்லிப்பழை விஜயரத்தினம் விமலநாதன் அந்தியேட்டித் தின வெளியீடு, 27/12, பரக்கும்பா பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
xxi, 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.
ஆசௌசம் என்பது விதிவிலக்கு காலமாகும். ஏறத்தாழ எழுநூறு வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்த அகோர சிவாச்சாரியார் என்பவரினால் ஆகம நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட அகோரசிவ பத்ததி என்னும் சைவ சமயக் கிரியைகளுக்கான கை நூலில் இவை விளக்கப்பட்டுள்ளன. இலங்கையில் யாழ்ப்பாண மரபில் ஆலய உற்சவங்களும் மற்றும் கிரியைகளும் இந்த அகோரசிவ பத்ததி வழியாகவே நடாத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறே சோமசம்பு சிவாச்சாரியார் செய்த சோமசம்பு பத்ததி தமிழ் நாட்டில் வழக்கில் உள்ளது. சைவத்தின் இருபத்தெட்டு ஆகமங்களிலும் ஆசௌச விதி என்று ஒரு அத்தியாயம் உள்ளது. இவை விரிவாகவும் ஒன்றுக்கொன்று சில வேறுபாடுகளுடனும் இருப்பதால் மேற்சொன்ன தொகுப்பு நூல்களான பத்ததிகள் மிகவும் பயனுள்ள கைநூல்கள் ஆகின்றன. ஒரு குடும்பத்தில் மரணம், பிறப்பு, பூப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தவிடத்து இக்காலத்தில் கோயில் வழிபாடு, தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை, அதிதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற கடப்பாடுகளில் இருந்து அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப் படுகின்றது. இது அவர்களின் அதீத துக்கம் அல்லது சந்தோஷத்தைக் கொண்டாடும் காலமாகும். பாதிக்கப்பட்டவர்கள் இவ்விதமான மன அதிர்வுகளிலிருந்து தமது வழமை நிலைக்குத் திரும்பும்வரை அவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறையே ஆசௌச காலம் ஆகும். இந்நூலில் ஆசௌசம் பற்றிய கருத்துக்களை, விதிமுறை களை இலகுபடுத்தித் தந்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24551).