12139 – ஞானகுரு.

ஆர்.கே.முருகேசு சுவாமிகள். நுவரெலியா: காயத்ரிபீட வெளியீடு, 82, லேடி மெக்கலம்ஸ் ட்ரைவ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை (சென்னை 6000024: ஏ.ஆர்.பிரின்ட்ஸ், 375-8, ஆர்க்காடு சாலை).

60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

ஆதிசங்கரர் ஏழாம் நூற்றாண்டில் இன்றைய கேரளத்திலுள்ள ‘காலடி’ எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநராவார். தனது இளமைக்காலத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் இவர் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று ‘சங்கர பகவத்பாதர்’ என்று அழைக்கப்பட்டார். இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களான பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வதை தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர் ஆதிசங்கரர். ஸ்ரீ ஆதி சங்கரர் ‘ஸாதனா பஞ்சகம்’ என்ற நூலில் இறையருள் பெற்றுய்ய விரும்பும் ஒருவன் முதலில் என்னென்ன செய்யவேண்டுமென்பதை விளக்கியிருக்கிறார். அதில் அவர் பாடியருளிய ஐந்து சுலோகங்களின் கருத்தை தமிழில் ‘ஞானகுரு’ என்ற இந்நூலில் முருகேசு சுவாமிகள் வழங்கியிருக்கிறார். முருகேசு சுவாமிகள் என அழைக்கப்பட்ட சுவாமி ஆர்.கே.முருகேசு (ராமன் காளிமுத்து முருகேசு, அக்டோபர் 26, 1933 – செப்டம்பர் 24, 2007) இலங்கையின் இந்து ஆன்மீகவாதிகளில் ஒருவர். காயத்திரிச் சித்தர் என அனைவராலும் போற்றப்பட்ட இவர் இலங்கையின் நுவரெலியா நகரில் வாழ்ந்தவர். நுவரெலியா நகரில் அமைந்துள்ள இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் காயத்திரி பீடம் என்பன இவரால் நிறுவப்பட்டவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26893).

ஏனைய பதிவுகள்