சிதம்பரநாதபூபதி (மூலம்), சி.இரத்தினசபாபதி ஐயர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சி.இரத்தினசபாபதி ஐயர், இரகுநாதையர் சோதிடபரிபாலன மடம், கொக்குவில், 1வது பதிப்பு, கார்த்திகை 1937. (யாழ்ப்பாணம்: சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில்).
(21), 251 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 22×14 சமீ.
‘சங்கர விலாசம்’ என்பது சிவபிரானுடைய திருவிளையாட்டு அல்லது திருவருட் பிரகாசம் என்று பொருள்படும். இந்நூல் சிவபுராணங்களில் கூறப்படும் விசேடங்களைத் திரட்டி வடமொழியில் இயற்றப்பெற்ற ‘சங்கர விலாசம்’ என்ற நூலைத் தமிழில் மொழி பெயர்த்து விருத்தப்பாவால் ஆக்கப்பெற்றதென்பது இதன் வரலாற்றுச் செய்யுளால் புலப்படுகின்றது. விசயை நகரத்துச் சிதம்பரநாத பூபதியால் இயற்றப்பெற்ற இந்நூல் செய்யுள்களின் பொருளைத் தொகுத்துக்கூறும் தலையங்கங்களுடன் யாழ்ப்பாணம் கொக்குவில் இரகுநாதையர் சோதிட பரிபாலன மடத் தலைவர் பிரமஸ்ரீ ச.இ.சிவராமலிங்கையர் புத்திரரும், ஆரிய திராவிட பண்டிதருமாகிய சி. இரத்தினசபாபதி ஐயரால் ஏட்டுப்பிரதியினின்றும் எழுதப்பெற்றது. சோதிட பரிபாலன மடத்துப் புத்தகக் கருவூலத்தில் இருந்த பழைய ஏட்டுப் பிரதிகளில் ஒன்றே இதுவாகும். கி.பி. 1700ஆம் ஆண்டு எழுதப்பட்டதாக பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். பதிப்புரை, நூல் வரலாறும் நூலாசிரியர் வரலாறும், வித்துவப்பெரியார் அபிப்பிராயங்கள், அணிந்துரை, முகவுரை, காப்பு, கடவுள் வாழ்த்து, பதிகம், உபமன்னியர் திருப்பாற்கடல் பெற்ற வத்தியாயம், சிவன் முருகாவனத்திற் பலியிருந்தவத்தியாயம், சுவேதமுனிவர் காலனைக்கடந்த அத்தியாயம், சிவன் முருகாவனத் திருடிகளுக்கருள்புரிந்த அத்தியாயம், ததீசிப்பிரம இருஷிவச்சிரயாக்கை வரம்பெற்ற அத்தியாயம், விட்டுணு மன்மதனைப் பெறச் சிவார்ச்சனை பண்ணின அத்தியாயம், விட்டுணு சக்கரம் பெறச் சிவார்ச்சனை பண்ணின அத்தியாயம், வசுசுருதன் பத்தியோக மகிமையுரைத்த அத்தியாயம், சுத்தியம்மினன் சிவநாமம் பகர்ந்த மகிமையுரைத்த அத்தியாயம், வீபூதி மகிமையுரைத்த அத்தியாயம், கமலாலய மான்மியமுரைத்த அத்தியாயம், செய்யுண் முதற் குறிப்பகராதி ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2372).