மாணிக்கவாசகர் (மூலம்). யாழ்ப்பாணம்: க.கி. நடராஜபிள்ளை, 1வது பதிப்பு, ஆடி 1942, (யாழ்ப்பாணம்: கமலாசனி அச்சு நிலையம்).
32+135+28 பக்கம், விலை: 50 சதம், அளவு: 11×14 சமீ.
வித்துவான் சி.கணேசையரின் முகவுரையுடன் கூடிய இந்நூலுக்கான சிறப்புப் பாயிரத்தை பா.இராமநாதபிள்ளை எழுதியுள்ளார். அகப்பொருள் பாடல்கள் தொகை நூல்களில் மிகுதியாக இடம் பெற்று விளங்கியபோதும், துறைகள் எல்லாம் தேர்ந்து, நூல் ஒன்று புனைய வேண்டும் என்ற அவாவே ‘கோவை’ இலக்கியம் தோன்றக் காரணம் என்பர். 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று கோவையாகும். முதலில் தோன்றிய கோவை இலக்கியம், ‘திருக்கோவையார்’. இது திருவாதவூரார் என்னும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும். இதை திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைப்பர். இந்நூலுக்கு பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் ‘திருக்கோவை’ என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால் விளங்கும். இந்நூல் 400 துறைகளை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இது 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் பேரின்ப நூல் ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை) பரையாகவும் சித்திரிக்கப் பட்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3088).