என்.சண்முகலிங்கன். தெல்லிப்பளை: நாகலிங்கம் நூலாலயம், நகுலகிரி, மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).
x, 108 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 20.5ஒ15 சமீ., ISBN: 978-955-51560-1-1.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், சமூக வியல்துறைப் பேராசிரியருமான என்.சண்முகலிங்கனின் இந்நூல் தமிழை அறிவியல் மொழியாக்குவதிலும், அறிவின் புதிய பரிமாணங்களை எட்டுவதிலும் வெற்றிகண்டுள்ளது. தமிழரின் அறிவுமுறையை உலகளாவிய நிலைக்கு இட்டுச்செல்வதும், உலகமயப்பட்ட அயலின அறிவுமுறையை நமக்கானதாகத் தன்வயப்படுத்தும் செயன்முறையும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அறிவின் சமூகவியலில் இத்தகைய உலகப் பொதுமைப்பாட்டையும் சுதேசிய சமூகங்களின் சுய அடையாளத்தையும் இணைத்தே அறியவேண்டியுள்ளது. பேராசிரியர் சண்முகலிங்கன் இந்நூலின் எட்டு இயல்களிலும் இவை பற்றி விவாதிக்கிறார். சமூக அறிவிற்கான ஊடக அறிவுக்கல்வி பற்றியும், அறிவின் அரசியல் பற்றியும், தாகூர் முன்வைத்த மனித முழுமைக்கான கல்வி பற்றியும், அறிவின் வழியான சமூக மேம்பாடு பற்றியும் அதன் சாதனைகள், சவால்கள் பற்றியும் ஆராய்ந்துள்ளார். இன்று புவியியல் காலனியவாதம் போய் கலாச்சாரக் காலனியவாதம் முக்கியத்துவம் பெறுகின்றது. இதில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய மூன்றும் வேகமாக நம்மைச் சூழ்ந்துவருகின்றன. இவற்றின் பிடியிலிருந்து ஒவ்வொரு சமூகமும் நிலைபெற வேண்டுமானால் அது சுதேசியத் தன்மையுடனும் தற்சார்புத் தன்மையுடனும் அசைவியக்கம் பெறவேண்டும் என்ற சிந்தனைத்தளத்தை இந்நூல் முன்வைக்கின்றது. இவை அனைத்தும் நிலைபேறான மேம்பாட்டிற்கான சுதேச அறிவு, அறிதலின் முறையியல், அறிவொளியின் வரம்புகள், அறிவின் அரசியல், அறிவின் வழியான சமூக மேம்பாடு, சமூக மேம்பாட்டுக்கான ஊடக அறிவுக்கல்வி, பிள்ளை மனங்களை புரிவதற்கான அறிவு, தாகூரின் மனித முழுமைக்கான கல்வி ஆகிய எட்டு இயல்களில் எழுதப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54058).