எம்.எஸ்.எம்.அனஸ். கொழும்பு 6: சித்தி லெப்பை நிறுவகம், 414, காலி வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
இந்நூல் சித்திலெப்பையின் இலட்சியங்கள், 19ம் நூற்றாண்டு வரையிலான முஸ்லிம் அரசியல், முஸ்லிம் அரசியல் முன்னோடி அறிஞர் எம்.சி.சித்திலெப்பை ஆகிய மூன்று இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக சித்திலெப்பை: முஸ்லிம் நேசன் கட்டுரைகளும், குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அறிஞர் சித்திலெப்பை சமூகத்தின் எழுச்சி என்பது ஒரு துறையில் மட்டும் தங்கி யிருப்பதில்லை என்பதை சரியாக உணர்ந்து, கல்வித் துறையில் மறுமலர்ச்சியொன்றை ஏற்படுத்தியது போன்றே அரசியல் விவகாரங்களிலும் கருத்துருவாக்கம் செய்தார். இவரது சமூக, கல்வி, ஆன்மீக பணிகளைப் போன்றே அரசியல், சிந்தனைப் பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் இந் நூல் வெளிவந்திருக்கின்றது. அறிஞர் சித்திலெப்பை இலங்கைவாழ் முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்கள் குறித்து அக்கறையுடன் செயற்பட்டுள்ளார். முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக வழிநடத்துவதிலும் பங்களித்துள்ளார். சர்வதேச முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்தும் இவர் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். அறிஞர் சித்திலெப்பையின் அரசியல் சிந்தனை இரு பரிமாணங்களைக் கொண்டிருந்ததை கலாநிதி எம்.எஸ். எம். அனஸ் இந்நூலினூடாக எடுத்துக்காட்டியுள்ளார். சித்திலெப்பை தேசிய ரீதியில் நாட்டின் மொத்த மக்களுக்குமான விடுதலையை முன்னிறுத்தி போராடிய தோடு, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளுக்காகவும் போராடியவர். இன்றைய முஸ்லிம் அரசியல் கட்சிகள் முஸ்லிம்கள் என்ற தனித்துவ அடையாளத்துடன் கூடிய கட்சிகளை உருவாக்கிக் கொண்டு முஸ்லிம்களுடைய விவகாரங்களில் மாத்திரம் கவனம் செலுத்தி வருவது அறிஞர் சித்திலெப்பை உணர்த்திய அரசியல் கலாசாரத்திற்கு மாறுபட்டதாகும். முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இந்த நாட்டின் அபிமானமிக்க பிரஜைகள் என்ற வகையில் இலங்கையின் தேசிய பிரச்சினைகளில் பங்கெடுத்து, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் கைகோர்க்க வேண்டும் என்பதே சித்திலெப்பையின் அரசியல் பாரம்பரியமாகும்.