ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: மொஹமட் ஷெரீப், கச்சி மொஹமட்). காத்தான்குடி: ஜுனைதா ஷெரீப், 27, லேக் றைவ், 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 10: யூ.டீ.எச். கம்ப்யுபிரின்ட், 51ஃ42, மொஹிதீன் மஸ்ஜித் வீதி).
xiii, 109 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-38432-0-3.
இந்நூலில் ஜுனைதா ஷெரீப் எழுதிய நல்ல மனைவி அல்லது பூலோக சொர்க்கம், ஓங்கி ஒரு குத்து, இரண்டு முட்டாள்களின் கதை, நெய்னா தோட்டம், அன்னதானம், கனவுலகம், எல்லாப் புகழும் இறைவனுக்கே, மீட்சி பெறாத அடிமைகள், கண்ணகி, பருப்பும் செருப்பும் ஆகிய பத்து சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 15.09.1940 இல் பிறந்த ஜுனைதா ஷெரீப், அல் நஸார் வித்தியாலயமென வழங்கப்படும் காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பாடசாலை, காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றவர். மார்ச் 1958 முதல் ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கியவர். இவர் மட்டக்களப்பில் இயங்கிய நாடகக் குழுவொன்றில் சேர்ந்து பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இவரது மூன்றாம் முறை, சிதைவுகள், சாட்சிகள் இல்லாத சாமத்தில் ஆகியவை தொடர்கதைகளாகத் தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவரால் காட்டில் எறித்த நிலா, ஒவ்வாமுனைக் காந்தங்கள், இது நம்ம சொத்து, ஒரு கிராமத்தின் துயில் கலைகிறது போன்ற பல நாவல்கள் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையின் அனுசரணையுடன் எழுதப்பட்டுள்ளன. இவர் தேசிய ரீதியாகவும், வட கிழக்கு மாகாண ரீதியாகவும் நான்கு சாகித்திய விருதுகள், இலங்கை அரசின் கலாபூசண விருது, இலக்கிய வித்தகர் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 261878CC).