கானவி (இயற்பெயர்: த.மிதிலா). வவுனியா: த.மிதிலா, 160, வைத்தியசாலை வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiii, 114 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18 x 12 சமீ., ISBN: 978-955-44428-0-1.
போர்ச் சூழலில் நின்று மக்கள் துயர் துடைத்த மருத்துவப் பணியாளர்களின் கருணை போற்றுதற்குரியது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் மக்களின் பேரவலமும் மருத்துவப் பணியாளர்களது அர்ப்பணிப்பான சேவையும் இவரது குறுநாவலில் யதார்த்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் யயெநளவாநளளைவ பணியில் சேவையாற்றும் த.மிதிலா தனது வன்னிப் பிராந்திய மருத்துவ அனுபவங்களின் பின்னணியில் இந்நாவலை எழுதியுள்ளார். காதலின் ஏக்கமும் தேடலுமே கதையின் கருவாக விரிந்திருந்தாலும், அதன் பின்னணியில் மருத்துவப் பணியின் மனிதநேய அணுகுமுறையே கருணை நதியாகப் பிரவாகிக்கின்றது. 20 அத்தியாயங்களில் எழுதப்பட்ட நாவல். திவா என்ற ஆணின் முகாம் வாழ்க்கையின் சங்கடமான நிலைமைகளை விளக்குவதுடன் தொடங்குகின்றது. அவனுக்குத் தெரிந்த ஒரு பெயரறியாப் பெண்ணை (சங்கவி) முகாமில் தேடிவருகின்றான். முகாமிலிருந்து வெளியேறிய அவனுக்கு வவுனியாவில் ஒரு வேலை கிடைக்கிறது. வேலையுடன் சங்கவியைத் தேடிச் சந்திக்கிறான். தன் உள்ளக்கிடக்கையை கடிதம் மூலம் வெளியிடத் துணிந்தாலும் அவனால் தொடர முடியவில்லை. யுத்த களங்களின் யதார்த்தநிலை கதையின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது என்ற வகையில், இது நல்லதொரு போர்க்காலப் படைப்பிலக்கியமாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233026CC).