எஸ்.புஷ்பராஜன். யாழ்ப்பாணம்: புஷ்பராஜா துஜீஸ்காந்த், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி).
xx, 125 பக்கம், தகடுகள், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 20.5 x 14.5 சமீ.
மருதமும் நெய்தலும் கைகோர்த்துச் சிரிக்கும் யாழ்நகரின் அரியாலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜன். குறிஞ்சிக் குமரிகள் என்ற இந்த இலக்கிய நாவலில் மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலை ஆகிய ஐந்துவகை நிலங்களிலும் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை இந்நூலில் அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றார். அந்நிலங்களின் அழகியலையும் துன்பியலையும் சித்திரிக்கும் கதையோட்டம் கொண்ட நாவல் இது. நான்கு குறிஞ்சிக் குமரிகளின் கதையாக இந்த நாவலின் களங்கள் விரிகின்றன. தம் அன்னையரைப் போன்று தம்மைப் பெற்றெடுத்ததன் மூலம் கன்னித் தாயாக நேரிட்டது போன்று தொடர்ந்தும் குறிஞ்சிக்கு இந்த நிலை வரவேண்டாம் எனப் புறப்படுகின்றனர் குறிஞ்சிக் குமரிகள். முருகக் கடவுளையும் அவர்தம் மனைவி வள்ளியையும் அறிந்த நாம் குறிஞ்சிக் குமரிகளின் ஊடாக குறிஞ்சி நிலத்தின் இன்னொரு தரிசனத்தையும் இந்நாவலில் பார்க்கலாம். கோதை, குயிலி, அருந்ததி, அகலிகை, மேனகை போன்ற பாத்திரங்களுடன் மருதபிள்ளை, வண்ணன், கமலன், முகுந்தன், குமரன், மகிந்தன் போன்ற ஆண் பாத்திரங்களையும் உலவவிட்டுள்ளார். கதையின் நாயகி குயிலி, நாவல் முழுவதும் உலாவந்து குறிஞ்சிக் குமரிகளைத் தத்தம் கணவர்களுடன் இணைத்துவைக்க முயல்கின்றாள். தன் மூதாதையரின் துயர்களை ஏற்கெனவே நன்கறிந்த அவள், அடுத்த தலைமுறைக்கும் அது பரவாமல் அத்துயர்களைத் துடைத்தெறியும் வீறுடன் இலட்சிய வேட்கைகொண்டு, தோழியருடன் முறையான திட்டமிடலுடன் மேற்கொண்ட பயணம் கதையை விறுவிறுப்பாக்குகின்றது. ஒவ்வொரு நிலமாகச் சென்று ஆங்காங்கே சந்திக்கும் பாத்திரங்களினூடாக பிரச்சினைகளை அணுகி, அவற்றுக்கான தீர்வினைக் கண்டு, தாம் கொண்ட இலட்சியத்தில் வெல்வதாகக் கதை சொல்லப்படுகின்றது. நெய்தல் நிலத்துக் கமலனுடன் குறிஞ்சி நிலத்துக் குமரிகளில் ஒருத்தியான அருந்ததியின் காதலும் களவொழுக்கமும் சொல்லப்படுகின்றன. கமலனின் இறப்பும் அருந்ததியின் தொடரும் துயரும் கதையில் வருகின்றது. கூடவே அகலிகை, மேனகை ஆகிய குறிஞ்சிக் குமரியர்களின் காதல்களும் சொல்லப்படுகின்றன. கன்னியரின் காதல்களும் திருமணம் முடித்துவாழ வேண்டுமென்ற ஏக்கங்களும் கதைகளாக – காவியங்களாக இங்கே நீள்கின்றன. குறிஞ்சி நிலத்தில் திருமணமாகாமல் கன்னியர் சேர்ந்து தாய்மையடைவதும், கன்னித்தாய்கள் திருமணமாவதற்கு ஏங்குவதும் இக்காவியத்தின் பேசுபொருளாகின்றன.