12824 – சூனியத்தை நோக்கி.

ஜுனைதா ஷெரீப். காத்தான்குடி: ஜுனைதா ஷெரீப், 27, லேக் றைவ், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 10: யூ.டீ.எச்.கம்ப்யுபிரின்ட், 51/42, மொஹிதீன் மஸ்ஜித் வீதி).

xiii, 210 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-38432-0-3.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வரலாற்றுச் சோகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரின் ‘சோனகத் தெரு’வில் வாழும் குடும்பமொன்றின் கதையாக இந்நாவல் தொடர்கின்றது. அங்குள்ள பள்ளிவாசல்கள், கடைத்தெரு, மக்களின் வாழ்க்கை முறை என்பன இலக்கியநயத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரியில் வசிக்கும் மற்றொரு குடும்பம் சோனகத் தெரு வியாபாரத்தோடு மட்டுமல்லாமல் குடும்ப உறவாகவும் மாறுகின்றது. குடும்பத்தின் புதிய தலைமுறைக்குள் உருவாகும் காதலும் இக் கதையை சுவாரஸ்யமாக்குகின்றது. நம்பிக்கைக்குரிய தமிழர்கள் உறவும் சிங்கள நண்பர்களின் உறவும் இணைந்த யாழ்ப்பாணத்து முஸ்லிம்களின் வாழ்க்கை நாவலின் முதற்பாகத்திலும், யாழ்ப்பாணத்திலிருந்து இருமணிநேர அவகாசத்தில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட அவலம் இரண்டாவது பாகத்திலும் விரிகின்றது. அகதி வாழ்க்கையில் அவர்கள் பட்ட அவஸ்தை, அவலம் என்பன இரண்டாம் பாகத்தை உணர்ச்சிபூர்வமாக்குகின்றது. எப்படி யாயினும் இந்தக் கொடூரமான துயரத்தினூடாகவும் யாழ்ப்பாண மக்களின் வாழ்வோடு ஒன்றித்திருக்கும் உழைப்பும் கல்வியும் தளராத தன்னம்பிக்கையும் நாவலின் கதாபாத்திரங்களினூடாக சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 261874CC).

ஏனைய பதிவுகள்