அ.செ. முருகானந்தன். கொழும்பு: நவலட்சுமி புத்தகசாலை, 136 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1950. (கொழும்பு: சுதந்திரன் அச்சகம்).
viiiஇ 48 பக்கம், விலை: 50 சதம், அளவு: 18 x 12 சமீ.
கொழும்பிலிருந்து வெளிவந்த சுதந்திரன் வார இதழில் தொடராக வெளிவந்த நாவல். இந்நாவலின் கதை சொல்லியான ராமலிங்கம் சுருட்டொன்றைப் பற்ற வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கின்றார். புகையை வட்ட வட்ட வளையங்களாக விட்டுக்கொண்டிருக்கின்றார். அச்சமயம் அச்சுருட்டுப் புகையினூடு அழகிய முகமொன்று தெரிகின்றது. அந்த முகத்துக்குரியவள் வேறு யாருமல்லள். புகையிலை வியாபாரி பொன்னுச்சாமியின் மகளான காந்திமதியே அவள். காந்திமதியையும் அவளது அத்தானான காதலன் முருகேசனையும் அவர்களது காதலை எதிர்த்து, பொன்னுச்சாமி கொன்று புதைத்து விடுகின்றார். புதைகுழியின் மீது தென்னம்பிள்ளையொன்றையும் நாட்டி வளர்த்து விடுகின்றார். அவ்விதம் அவரால் கொல்லப்பட்ட அவரது மகளான காந்திமதியும், அவளது காதலனான முருகேசனும் கதை சொல்லியான ராமலிங்கத்துக்குத் தங்களது கதையினைக் கூறுவதாக நாவல் நகர்த்தப்படுகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000168).