12845 – பாரதிதாசனின் தேசியக் கருத்துநிலையும் ஈழத்துக் கவிஞர்களில் அதன் செல்வாக்கும்.

சி.மௌனகுரு. சென்னை 600 098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-டீ, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (சென்னை 600 014: பாவை பிரின்டர்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை).

(8), 84 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21 x 14 சமீ., ISBN: 81-234-1033-6.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையினர் 2004ஆம் ஆண்டில் பாரதிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்ற ஈழத்தின் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களை அழைத்திருந்தார்கள். இரண்டு தினங்களில் இவர் ஆற்றிய மூன்று சொற்பொழிவுகள் தொகுக்கப்பெற்று இங்கு தனி நூலாக்கப்பட்டுள்ளது. தேசியக் கருத்துநிலையும் இந்திய இலங்கைத் தமிழரிடையே தேசியவாதம் வளர்ந்தமையும், பாரதிதாசனின் கவிதைகளுக்கூடாக அவரது தேசியக் கருத்து நிலை, ஈழத்து நவீன கவிதை மரபில் பாரதிதாசனின் கருத்துநிலைத் தாக்கம் ஆகிய மூன்று தலைப்புகளில் இவ்வுரைகள் ஆற்றப்பட்டன. தமிழ்த் தேசிய பண்பாட்டு ஆதிக்கம் இல்லாததாக அனைத்துத் தமிழ் மக்களையும் உள்ளடக்கியதாக, சமதர்ம நோக்குடையதாக, பெண் விடுதலை கொண்டதாக, சமயச் சார்பற்றதாக, தொழிலாளர் விடுதலை, விளிம்புநிலை மக்கள் விடுதலை கொண்டதாக அமையவேண்டும் என்பது பாரதிதாசனின் நோக்காக இருந்தது. நிலவும் அமைப்பை உடைத்து ஒரு புதிய வாழ்வைக் கற்பனைசெய்த தேசியக் கருத்து நிலையை பாரதிதாசன் கொண்டிருந்தார். பாரதிதாசனின் தேசியக் கருத்துநிலையும் தமிழர் விடுதலைக் கருத்துக்களும் 1940, 1950, 1960ஆம் ஆண்டுகளில் ஈழத்தமிழ்க் கவிஞர்கள் மீது பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43115).

ஏனைய பதிவுகள்