12900 – எங்கள் குருநாதன் திருவாசக சுவாமிகள்.

முருக.வே.பரமநாதன் (புனைபெயர்: ஆழ்கடலான்). களுபோவிலை: தெகிவளை திருவாசகம் சுவாமிகள் தொண்டர் சபை, 11/6, ரூபன் பீரிஸ் மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கொழும்பு 13: இலட்சுமி அச்சகம் இணை பதிப்பாளர், வீமாஸ் அச்சகம்).

(4), 57 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21.5 x 14 சமீ.

திருக்கேதீஸ்வரம் திருவாசகம் ஸ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகளின் தொண்ணூ றாவது ஜயந்தி தினத்தை முன்னிட்டு எழுதிய நூல். திருவாசக சுவாமிகள் என அழைக்கப்படும் சபாரத்தினம் சுவாமிகள் (மார்ச் 28, 1904 – ஜனவரி 25, 1988) தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரத்தில் சிவதொண்டுகள் புரிந்து தவ வாழ்வினை மேற்கொண்டவர். அங்கு திருவாசக மடம் ஒன்றை நிறுவி அடியார்களுக்கு அமுதளித்து திருவாசக உரையையும் வழங்கி வந்தார். திருவாசக சுவாமிகள் 1904 ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் திருவாதிரை நாளில் யாழ்ப்பாணம் அல்வாயைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவருக்கும் சுண்டிக்குளியில் பாண்டியன் தாழ்வில் வசித்த சின்னத்தங்கத்திற்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இளமையிலே யோகர் சுவாமிகளின் அருட்பார்வை இவருக்கும் கிட்டியது. இறுதி நாட்களில் சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார். நாள்தோறும் சுவாமியைச் சந்தித்து உரையாடவும் ஆசீர்வாதம் பெறவும் அவருடைய திருவாசக உரைகளைக் கேட்கவும் அடியார்கள் கூடுவார்கள். 1988 ஆம் ஆண்டு தை மாதம் பூர்வ பக்க சப்தமி திதியில் அவரது சுண்டிக்குளி இல்லத்தில் காலமானார். அவரது அஸ்தி அடங்கிய நினைவாலயம் ஒன்று மறவன்புலவில் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிகள் பற்றிய கட்டுரைகளும், அவர்மேற் பாடப்பெற்ற பாடல்களும், விளக்கவுரைகளுமாக ஆழ்கடலான் தொகுத்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2453).

ஏனைய பதிவுகள்