ச.குமாரசுவாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ சிவ-சங்கரபண்டிதர் ஞாபகார்த்த சபை, 1வது பதிப்பு, ஜய வருடம் சித்திரை 1954. (யாழ்ப்பாணம் ஸ்ரீகாந்தா அச்சகம்).
xvi, 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x 13 சமீ.
ஸ்ரீலஸ்ரீ சிவ-சங்கரபண்டிதர் ஞாபகார்த்த சபை 14.2.1954 அன்று நீர்வேலி ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலைய மண்டபத்தில் கூடிய பொதுக்கூட்டமொன்றில் தலைவர் சிவஸ்ரீ க.குமாரசுவாமிக் குருக்களின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இச்சபையின் முதலாவது வெளியீடாக சிவசங்கர பண்டிதரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது. தென்மொழிகளில் பாண்டித்தியம் பெற்றதோடு, ஆங்கில மொழியறிவும் பெற்றிருந்த ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதர் அவர்கள், தனது இல்லத்திலேயே மாணவர்களை அழைத்து, சமஸ்கிருதம், தமிழ் இலக்கணம், இலக்கியம் என்பனவற்றைப் போதித்ததோடு, புராண படனங்களையும் கற்பித்தார். மாணவர்களுக்குப் போதிப்பதும், கிரந்தங் களைப் பரிசோதித்து எழுதுவதும் இவருக்கு இடையறா வேலையாகவிருந்தது. இவரது வீடு திண்ணைப் பள்ளிக்கூடமென அழைக்கலாயிற்று. வடமொழியிலும் தமிழிலும் பாண்டித்தியம் பெற்ற சிவசங்கர பண்டிதரின் நூல்களாக சம்ஸ்கிருத சித்தாந்த சாராவலி லகுடீகை, சம்ஸ்கிருத சிவஞானபோதத் தமிழுரை, சம்ஸ்கிருத சட்சுலோகித் தமிழுரை, தமிழ்ச் சிவபூசை யந்தாதி விருத்தியுரை, தமிழ் மிலேச்சமத விகற்பம், தமிழ் கிறிஸ்து மத கண்டனம், தமிழ் சைவப் பிரகாசனம், தமிழ் சிராத்த விதி, சம்ஸ்கிருத அக நிர்ணயத் தமிழுரை, சம்ஸ்கிருத சத்த சங்கிரகம்-1ம் பாகம், சம்ஸ்கிருத அகபஞ்ச சட்டித் தமிழுரை, சம்ஸ்கிருத பாலபாடம் (2வது நூல்), சம்ஸ்கிருத தாது மாலை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18433).