12943 – நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்: வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.

மு.வி.ஆசீர்வாதம். யாழ்ப்பாணம்: நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு விழா ஞாபக ஏடு, மு.வி.ஆசீர்வாதம், 49, கண்டி வீதி, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்).

12 பக்கம், விலை: 75 சதம், அளவு: 21.5 x 14 சமீ.

பன்மொழிப் புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (30.08.1875 – 22.01.1947) தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பிய ஈழத்தறிஞர். இலத்தீன், கிரேக்கம் போன்ற 18 மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும். இவர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித் தோன்றலான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து இணையரின் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம் என்பதாகும். அவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்துப் பிள்ளையை மறுமணம் புரிந்தார். அவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயும் மகனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்ற ஞானப்பிரகாசர், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார். 1893 இல் தொடர்வண்டித் துறையில் எழுதுவினைஞர் தேர்வில் முதலாவதாகத் தேறி கடிகமுகவவிலும் பின்னர் கொழும்பிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் 1981 மே 22 இல் வெளியிட்டது. இச்சிறுநூல் சுவாமி ஞானப்பிரகாசரின் வாழ்க்கை வரலாற்றை மிகச்சுருக்கமாக பிறப்பு, வளர்ப்பு, கல்வி, தொழில், துறவியாக, குருப்பட்டம், சமயத் தொண்டகள், பன்மொழிக் கல்வி, நூல் ஆக்கம், மறைவு ஆகிய குறுந் தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. இறுதியாக ஞானப்பிரகாசர் மீது பாடப்பெற்ற அந்தாதிப் பதிகமும் இடம்பெற்றுள்ளது. இவ்வந்தாதி முன்னர் 1960 ஜனவரி மாதத்தில் வெளிவந்த விவேகி சஞ்சிகையின் ஆண்டு மலரிலிருந்து மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14141).

ஏனைய பதிவுகள்