ஸ்ரீ பிரசாந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 67 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978- 955-659-558-1.
யாழ்ப்பாணம், புலோலியில் 1871இல் பிறந்தவர் நாகப்பிள்ளை கதிரவேற்பிள்ளை. இளமையிலேயே சுறுசுறுப்பும் ஞாபகசக்தியும் மிகுந்தவராக காணப்பட்ட இவர், வித்தியாரம்பம் செய்யப்பட்ட பின்னர் ஊரிலிருந்த ஒரு பாடசாலையிலே கல்வி யினைத் தொடர்ந்தார். வறுமையின் காரணமாய் தொடர்ந்து கற்க முடியாமையால் ஆறாம் வகுப்புடன் பாடசாலைக் கல்வியினை நிறுத்திக்கொண்டார். பின்னர் சிதம்பரப்பிள்ளை எனும் நொத்தரிசுக்கு உதவியாளராய் வேலைக்குச் சேர்ந்து கொண்டார். சிறிது காலத்தின்பின் தமிழ்நாடு சென்று தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் சிறப்புறக் கற்றார். அங்கே அவர் திருகோணமலை கனகசுந்தரம்பிள்ளையையும் சந்தித்து தொல்காப்பியத்தினையும் அவரிடம் திரிபறக் கற்றார். சங்க இலக்கியங்களையும் கேட்டறிந்தார். பிற்கால இலக்கியங் களிலும் தன் புலமையினை வளர்த்துக்கொண்டார். கதிரவேற்பிள்ளை கூர்மபுராணம் மற்றும் பழனித் தலபுராணம் என்பவற்றிற்கு உரையும் செய்துள்ளார். சைவசந்திரிகை, சைவசித்தாந்தம் எனும் நூல்களையும் செய்துள்ளார். இவர் செய்த அகராதி யாழ்ப்பாண அகராதி என வழங்கப்படுகின்றது. இவர் மாயாவாதிகளை கண்டிப்பதில் முன்னிற்பவர். அதனால் வித்துவான்கள் பலரும் காசிவாசி செந்திநாதையர் தலைமையிற்கூடி இவருக்கு ‘மாயாவாததுவம்சகோளரி’ என்றொரு பட்டத்தினை வழங்கினார்கள். இராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்கள் அருட்பாக்கள் அல்லவென்றும் அவை மருட்பாக்கள் என்றும் எழுதிய கண்டனங்கள் காரணமாய் சென்னை நீதிமன்றில் 1904 மார்கழியில் நடந்த விவாதத்திலே கதிரவேற்பிள்ளை அவர்கள் வெற்றிபெற்றார்கள். அட்டாவதானம், சதாவதானம் செய்வதிலும் கதிரவேற்பிள்ளை வல்லவர். இதனால் அவர் பெயர் சதாவதானி ந. கதிரவேற்பிள்ளை என வழங்குவதாயிற்று. திரு. வி. உலகநாத முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார் என்போர் இவர் மாணக்கருள் குறித்துச் சொல்லப்படக் கூடியவர்கள். புலோலி சதாவதானி. ந. கதிரவேற்பிள்ளை அவர்கள் 1907ம் ஆண்டிலே சிவனடி சேர்ந்தார். குமரன் பதிப்பகத்தின் இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசையில் 22ஆவதாக வெளிவந்துள்ள இந்நூல், வாழ்க்கைப் பின்புலம், பேச்சாளர், கண்டன அறிஞர், திருமுறைக் காவலர், அகராதிச் செல்வர், உரையாசிரியர், வசனநடை வல்லார், மரபுக்கவிஞர், பதிப்பாசிரியர், நல்லாசிரியர், சதாவதானி, மதிப்பீடு ஆகிய 12 தலைப்புகளில் அவரது வாழ்வும் பணிகளும் இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக கால வரிசையில் கதிரைவேற்பிள்ளை வரலாறு, கதிரைவேற்பிள்ளை நூற்பட்டியல் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.