கல்கி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணமூர்த்தி). சென்னை 17: பாரதி பதிப்பகம், தியாகராய நகரம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 1956, 1வது பதிப்பு, ஜனவரி 1954. (சென்னை 14: மாருதி பிரஸ், இராயப்பேட்டை).
96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5 x 12.5 சமீ.
பத்து அத்தியாயங்களில் தனது ஒரு வாரகால இலங்கைப் பயணத்தை சுவைமிக்க தனது எழுத்தாளுமையுடன், அங்கதச் சுவை கலந்து இப்பயணக் கதையில் விபரித்திருக்கிறார். ‘மரகதத் தீவு’ என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்குப் பயணம் செய்து, தன் அனுபவங்களை ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் 05.06.1938 முதல் 02.10.1938 வரை சுவைபட எழுதியிருந்தார். தான் சென்றுவந்த ஈழத்தின் தமிழ்ப் பிரதேச மக்களின் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள், தான் சந்தித்த தமிழ் அறிஞர்கள் என விரிவாகத் தன் மனவுணர்வுகளைப் பதிவுசெய்திருக்கிறார். அந்தத் தொடரின் நூல்வடிவம் இது. கல்கி அவர்கள் 09.09.1899-அன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பப் பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய வேளையில் அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் ‘நவசக்தி’ என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ‘ஏட்டிக்குப் போட்டி’ 1927-ல் வெளியானது. மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புதினம் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் இவர் பங்களித்திருக்கிறார். ‘தியாகபூமி’ நாவல் பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19442. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004265).