தி.செல்வமனோகரன். யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
x, 114 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42192-3-6.
இந்நூலில் தமிழ் மெய்யியற் செல்நெறியில் சிலப்பதிகாரம், தமிழ் பௌத்தம், ஆசீவகமும் சமணமும், தமிழில் தருக்கவியல், தமிழ் மெய்யியல் மரபில் பரபக்கவியல், திருமுறை வைப்பில் திருமந்திரம், சைவசித்தாந்த செல்நெறியில் ஞானாமிர்தம், மெய்கண்டார்-சோழர்காலம் பற்றிய மறுவாசிப்புக்கான ஒரு முற்குறிப்பு, தமிழர் மெய்யியல்-மறுவாசிப்பக்கான சில குறிப்புகள், சமயப் பிரிவுகள் பற்றிய வு.ஆ.P.மகாதேவனின் கருத்தியல்-ஒரு விமர்சன நோக்கு ஆகிய பத்துக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. காலப் பெருநதியின் வழியில் தமிழ் மொழி பல்வேறு மெய்யியல் சமய, கலை, கலாசாரப் பண்பாட்டு அம்சங்களைப் பெற்றும் இழந்தும் புதுக்கியும் வந்துள்ளது என்பதைச் சுட்டுவதாக மேற்கண்ட கட்டுரைகள் அமைகின்றன. இந்நூலில் வைணவ மெய்யியல்களான விஷிட்டாத்வைதம், துவைதம் பற்றிய ஆய்வுகளும் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று வாசகர் கருதக்கூடும். அவை தமிழ் மூலங்களை ஏற்றுக்கொண்டிருந்தாலும் சமஸ்கிருதத்திலேயே முன்வைக்கப்பட்டன. சமணம், ஆசீவகம், பௌத்தம் என்பன சமஸ்கிருத, பாளி மொழிகளை மூலமாகக் கொண்டமைந்திருப்பினும் தமிழ்ச் சூழலுக்கேற்ப தமிழில் முன்வைக்கப்பட்டன என்பது கவனத்துக்குரியது. திருச்செல்வம் செல்வமனோகரன் இந்து மெய்யியல்துறையை தனது கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். தூண்டி இலக்கிய வட்டம் சார்பில்; பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளை வழிநடத்தியவர்.