க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துமத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9233-79-4.
இந்து சமய அறநெறிப் பாடசாலைகளுக்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஐந்து நூல்களில் மூன்றாவதாகும். இதில் ஒளவையாரால் இயற்றப்பெற்ற நல்வழி, துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் இயற்றப்பெற்ற நன்நெறி, அரசரும் அறிஞருமான அதிவீரராம பாண்டியனால் இயற்றப்பெற்ற வெற்றிவேற்கை (அல்லது நறுந்தொகை) ஆகிய ஒழுக்கவியல் நூல்கள் மூன்றும்; இடம்பெற்றுள்ளன. ஒளவையாரால் இயற்றப்பெற்ற நல்வழி, கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது செய்யுள்களால் ஆனது. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் இயற்றப்பெற்ற நன்நெறியும், கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது செய்யுள்களால் ஆனது. சிவப்பிரகாச சுவாமிகள் வீரசைவ நெறியைப் பின்பற்றிய போதிலும் நூலுக்குள்ளே சமயக் கருத்துக்களை எடுத்துரைக்காது எச்சமயத்தாருக்கும் பொருந்தும் வகையில் செய்யுள்களை இயற்றியுள்ளார். பாண்டிய அரசகுலத்தவரான அதிவீரராம பாண்டியனால் இயற்றப்பெற்ற வெற்றிவேற்கை, கடவுள் வாழ்த்து, பாயிரம் என்பன நீங்கலாக அறுபத்திரண்டு செய்யுள்களை உடையதாகக் காணப்படுகின்றது.