சோ.கிருஷ்ணராஜா (மூலம்), வடிவேல் இன்பமோகன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 138 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-625-0.
பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜாவின் சைவசித்தாந்தம்-மறுபார்வை (1998), சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல்-ஓர் அறிமுகம் (1995) ஆகிய இரு நூல்களின் இணைவாக வெளியிடப்பட்டுள்ள நூல் இது. சைவசித்தாந்த மெய்யியலின் அடிப்படையாகத் திகழ்கின்ற அறிவாராய்ச்சியியல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சைவசித்தாந்த மெய்ப்பொருளியல் குறித்த வரலாற்று நோக்குணர்வு என்பவை இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருப்பதுடன் சைவசித்தாந்தம் தொடர்பில் புதிய விவாதப் புள்ளிகளைத் திறக்கும் வகையில் பல மாறுபட்ட புரிதல்களை அளிக்க இந்நூல் முற்படுகின்றது. சைவசித்தாந்தம்-மறுபார்வை என்ற முதலாவது பகுதியில் முன்னுரை, தமிழின் முதலாவது பக்தியுகமும் சைவசித்தாந்தத்தின் பிறப்பும், மெய்கண்ட சாஸ்திரங்களிற்கு முற்பட்ட சைவசித்தாந்தம், சைவசித்தாந்த ஒழுக்கவியல்-தேவிகாலோத்தரப் போதனை, சைவசித்தாந்த மத்திக் கோட்பாடு-சர்வஞ்ஞானோத்தர ஆகமப் போதனை, ஊகமும் நியாயித்தலும்-இந்திய மரபில் மெய்யியலின் தோற்றம் பற்றிய சில குறிப்புகள் ஆகிய ஐந்து இயல்கள் இடம்பெற்றுள்ளன. சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல்-ஓர் அறிமுகம் என்ற இரண்டாம் பகுதியில், முன்னுரை, அறிமுகம், அறிவாராய்ச்சியியலில் ஐயம், காட்சிக் கொள்கை, அனுமானக் கொள்கையும் அதன் தருக்க அறிவாராய்ச்சியியல் அம்சங்களும், சப்தப் பிரமாணம் அல்லது உரையளவை, முறையியல் உத்திகள் ஆகிய ஆறு இயல்கள் அடங்கியுள்ளன.