செ.சிவப்பிரகாசம். யாழ்ப்பாணம்: பண்டிதர் செ.சிவப்பிரகாசம், திருவருளகம், தாவடி, கொக்குவில், 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: சுதந்திரநாத அச்சகம், திருநெல்வேலி).
xvi, 87 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 17×12 சமீ.
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிய கோயிற்புராணம் சிதம்பரத்தைப்பற்றிக் கூறும் புராணமாகும். இக்கோயிற் புராணப் பொருளை யாவரும் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையான வசனநடையில் இந்நூலை ஆசிரியர் ஆக்கியிருக்கிறார். இந்நூல் வியாக்கிரபாத மகாமுனிவர், பதஞ்சலி மகாமுனிவர், நடராஜர் திருநிருத்தம், இரணியவன்மர், திருவிழா எடுத்தமை என்னும் ஐந்து பகுதிகளாகப் பகுத்து எழுதப்பட்டுள்ளது. இறுதியில் அரும்பத உரைக் குறிப்பும் இடம்பெற்றுள்ளது. எங்கும் நிறைந்துள்ள கடவுளுக்கு கோயில் வேண்டுமா? கோயில் எப்படி உண்டாவது? ஞானிகளும் கோயில் வழிபாடு செய்யவேண்டுமா? கோயில் வழிபாடு செய்யும் கூட்டம் எவ்வாறு பெருகவேண்டும், கோயில் திருப்பணியின் இரகசியமென்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு இந்நூல் விடை பகர்கின்றது. பண்டிதர் செ.சிவப்பிரகாசம் யாழ். திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையின் ஆசிரியராவார். இந்நூலுக்கான அணிந்துரையை பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையும், சென்னை தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்து மு.சண்முகம்பிள்ளையும், பண்டிதமணி சு.அருளம்பலவனாரும், க.கைலாசநாதக் குருக்களும் வழங்கியுள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84647).