மலர்க்குழு. கொழும்பு: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, நவம்பர் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
554 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5 சமீ.
இக்கோயில் பரிபாலகர் பொன்.வல்லிபுரம் அப்போதைய பரிபாலன சபையினருடன் இணைந்து 1987 ஆம் ஆண்டில் அம்மனுக்கு அரச மரச்சாரலில் கோயில் அமைத்தார். தென்னிந்தியாவில் இருந்து சிற்பக் கலைஞர்களினால் செதுக்கப்பெற்ற பத்திரகாளி அம்பாளின் சிலையை வரவழைத்து, 1987 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் உத்தராட நட்சத்திர நாளில் ஆலயம் அமைத்து மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்வாலயத்தில் நடைபெறுகின்ற ஆடிப்பூர இலட்சார்ச்சனை, தேர் உற்சவம், இந்து சமுத்திரத் தீர்த்த உற்சவம், நவராத்திரி விழா ஆகியவை யாவும் சிறப்புக் காட்சிகளாகும். அது மட்டுமன்றிச் சமயத்தை வளர்க்கும் பணிகளான அறநெறிப் பாடசாலை, பண்ணிசை வகுப்பு, சமய சம்பந்தமான சொற்பொழிவுகள் என்பனவும் மிகவும் சிறப்பாக ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும் இவ்வாலயத்தில் அருங்கலை மண்டபம், தியான மண்டபம் மற்றும் சுப்பம்மாள் கல்யாண மண்டபம் என்பனவும் கட்டப்பெற்றுள்ளன. 09.11.2000ஆம் ஆண்டில் இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றவேளையில் இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. நான்கு பாகங்களில் உருவாகியுள்ள இம்மலரில் ஆன்றோரின் அருள்வாக்குகளைக் கொண்ட ‘அருள்மொழி’ என்ற பாகம் முதலாவதாகவும், மயூரபதி அன்னையின் மாண்புகள் கூறும் ‘மயூரபதி’ என்ற பாகம் அடுத்ததாகவும் அமைகின்றது. சக்தி பற்றிய பல விடயங்களைத் தாங்கியதாக ‘சாக்தநெறி’ என்ற மூன்றாம் பாகமும், பாரதத்திலும் இலங்கையிலும் காணப்படும் சக்தித் திருத்தலங்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் தரும் ‘சக்தி தலங்கள்’ என்ற பாகம் நான்காவதாகவும் அமைந்துள்ளன. மலர்க் குழுவில் வசந்தா வைத்தியநாதன், ச.ஆ.பாலேந்திரன், இ.ஜெயராஜ், க.இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20032).