13206 ஏகாதசிப் புராணம்.

சுன்னாகம் வரதராச பண்டிதர் (மூலம்), ஆ.வேலுப்பிள்ளை உபாத்தியாயர் (பதவுரை). புலோலி: ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில், துன்னாலை வடக்கு, 2வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை, 1வது பதிப்பு, 1958. (பருத்தித்துறை: எஸ்.பி.எம். ஓப்செட் பிரின்டர்ஸ் டெலிகொம்யுனிகேஷன்ஸ், வீ.எம்.வீதி).

(4), 148 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

ஏகாதசி புராணம் ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அவ்விரதம் அனுஷ்டித்தோர் சரிதங்களையும் கூறுகிறது. உருக்குமாங்கதன், வீமன் ஆகியோர் சரிதங்களை இதிற் காணலாம். சிவ விரதங்களுட் சிறந்ததாகிய சிவராத்திரி விரதத்தைக் குறித்துப் புராணம் பாடியது போலவே வரதபண்டிதர் திருமால் விரதங்களுட் சிறந்ததாகிய எகாதசி விரதத்தைக் குறித்து இப்புராணத்தைப் பாடியுள்ளார். இந்நூல் காப்புச் செய்யுள் ஒன்றினையும், கடவுள் வாழ்த்துப்பாக்கள் ஐந்தினையும், அவையடக்கச் செய்யுள் ஒன்றினையும், பாயிரச்செய்யுள் ஒன்றினையும், காலநிர்ணயச் சருக்கம், உருக்குமாங்கதச் சருக்கம், வீமேகாதசிச் சருக்கம் ஆகிய மூன்று சருக்கங்களையும், இறுதியில் ஏகாதசிப் புராணம்-அரும்பத விளக்கப் பட்டியலையும் கொண்டுள்ளது. இது வரதபண்டிதர் (1656-1716) செய்த நூலாகையால், இது 18ம் நூற்றாண்டுக்குரிய தென்று கொள்ளலாம். இதனை நா. கதிரவேற்பிள்ளை முதன் முதல் 1898இல் அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் சுப்பிரமணிய சாஸ்திரிகள் அரும்பதவுரையுடன் 1924இல் அச்சிட்டார். பின்னாளில் இதனைத் தொடர்ந்து ச. சோமாஸ்கந்த ஐயர் 1947ம் ஆண்டிலும், ஆ. வேலுப்பிள்ளை உபாத்தியாயர் பதவுரை எழுதி 1958ம் ஆண்டிலும் பதிப்பித்தனர்.ஆ.வேலுப்பிள்ளையின் பதவுரையை, புலோலி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் அறங்காவலர் சபையினர் யாழ்ப்பாணம் ஊற்று நிறுவனத்தைச் சேர்ந்த திரு.விக்கினேஸ்வரன் என்பவரின் வேண்டுகோளின் பேரில் மீள்பதிப்பாக வெளியிட்டுள்ளனர். மீள்பதிப்பின் வெளியீட்டு ஆண்டு விபரம் குறிப்பிடப்படவில்லை. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 15649). 

ஏனைய பதிவுகள்