மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளை (மூலம்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, ஓகஸ்ட் 2018, 1வது பதிப்பு, 1922. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
x, 519 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-9233-56-5.
இந்நூல் முருகனின் மாண்பைக் கூறுகின்றது. சிவனும் முருகனும் ஒன்றே என நிறுவுகின்றது. சத்தியமான் மூர்த்தி என்ற முதலாவது இயல் தொடக்கம், வள்ளி பரிணய மூர்த்தி ஈறாக 88 தலைப்புகளில் தனித்தனி இயல்களில் முருகன் பெருமை போற்றப்பட்டுள்ளது. இந்நூல் உரைநடையாலாக்கப்பட்டுள்ளது. தமிழும் கிரந்த மொழியும் கலந்த நவீன மணிப்பிரவாளமாக உள்ளது. புணர்ச்சி உள்ளிட்ட இலக்கண மரபை சுத்தமாகப் பேணும் பண்பைக் காணமுடிகின்றது. நிறுத்தற்குறிப் பயன்பாடு நீண்ட வாக்கியங்கள், தேவையான இடங்களில் சிறு சிறு வாக்கியங்கள் என்பவையும் உள்ளன. பண்டித மரபின் மணங் குறையாத மொழிநடையில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் புலமைத்துவச் செயற்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இந்நூல் (1922ஆம் ஆண்டுப் பதிப்பு) அமைந்துள்ளது. இப்பதிப்பானது காஞ்சிபுரம் ஜமிந்தாரும் திருவேகம்பநாத சுவாமி தேவஸ்தான தர்மகர்த்தரும் ஆகிய கா.மு.சுப்பராய முதலியார் அவர்கள் விரும்பியபடி யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்வான் ஸ்ரீலஸ்ரீ நா.கதிரைவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. சென்னைக் குயப்பேட்டை பி.நா.சிதம்பரமுதலியார் அண்ட் பிரதர்ஸ் அவர்களது வித்யாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது. 1922இல் இரண்டு ரூபாவாக விலை குறிக்கப்பெற்றுள்ளது. இந்நூல் 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் அச்சுருவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் பல தமிழகப் பதிப்புகள் குறைபாடுகளுடனும் இருட்டடிப்புகளுடனும் வெளியிடப்பட்டுள்ளமையும் பதிவுசெய்யப்படவேண்டும். 1960இல் அருணா பிரிண்டர்ஸ் பதிப்பித்த நூலில் (3வது பதிப்பு) கிரந்த மொழியிலிருந்த உற்போதகாத பந்தி (முன்னுரை) இடம்பெறவில்லை. சகுந்தலை நிலையத்தினரால் முதற்பதிப்பு மே 2017 ஆகக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட பதிப்பிலும் கிரந்த மொழி உற்போதகாதம் தமிழ்மொழித் தூய்மை என்ற கொள்கையின் படி தவிர்க்கப்பட்டுள்ளது. நூலின் உள்ளே இருந்த கிரந்த மொழிச் சுலோகங்களையும் நூலாசிரியரின் அனுமதியின்றியே தவிர்த்துவிட்டனர். மேலும் சகுந்தலை நிலையத்தினரால் முதற்பதிப்பில் (மே 2017), ஈழத்து நூலாசிரியரின் பெயரே களையப்பட்டு, தமிழகச் சூழலில் நூலாசிரியர் ஈழத்தவர் என்பதற்கான எவ்வித குறிப்புகளும் இடம்பெறவில்லை. இக்குறைபாடுகளை விரிவாக பதிப்பாசிரியர் தி.செல்வமனோகரன் இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.