திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார் மடம்).
(v), 23 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 18×12 சமீ.
நவராத்திரி என்னும் சொல்லுக்கு ஒன்பது நாட்களில் செய்யப்பெறும் நோன்பு அல்லது உற்சவம் என்று பொருள். உற்சவம் முடியும் பத்தாம் நாளையும் கணக்கெடுத்து வடநாட்டினர் அதை தசரா என வழங்குவர். புரட்டாதி மாதத்துப் பூர்வபக்க பிரதமைத் திதி முதலாக உள்ள ஒன்பது இரவுகள் நவராத்திரி எனவும் பத்தாம் நாள் விஜயதசமி எனவும்படும். இந்துக்கள் அனைவரும் இப்பூஜையை சிறப்பாகச் செய்து வருகின்றனர். கிருதயுகத்திலே பக்தியிற் சிறந்த சுகேதன் என்ற அரசன் தனது இராச்சியத்தை இழந்து மனைவியோடு வனவாசம் சென்றபோது அங்கிரசன் என்னும் இருடி நவராத்திரி பூஜையின் மகிமையையும் அதன் வழிபாட்டு முறையையும் உபதேசித்ததாகக் கதையுண்டு. அவ்வரசன் அவ்வாறே நவராத்திரி பூசையைப் பக்தியோடு செய்து தனது இராச்சியத்தை மீளவும் பெற்று வாழ்ந்ததாக புராணக்கதை கூறுகின்றது. அதன் காரணமாக பின்னாளில் அக்காலத்தில் துர்க்கை, இலக்குமி, சரசுவதி இம் மூவரையும் முறையே ஒவ்வொருவருக்கும் மூன்று தினமாக ஒன்பது நாளும் பூசித்து வருவதுண்டு. தாய்க்கும் பிள்ளைக்குமான இணக்கமாக உருவகித்து பாடப்பெற்ற பக்கி இலக்கியமான நவராத்திரி பாமாலை அந்நாட்களில் பாடப்பெறுவதுண்டு. இந்நூல் அப்பாமாலையை உள்ளடக்கியுள்ளது.