வரத பண்டிதர்; (மூலம்), க.இரகுபரன் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xxx, 81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-9233-63-3.
கிள்ளைவிடு தூது காங்கேசன்துறையைச் சேர்ந்த கண்ணியவளை என்னுமிடத்தில் எழுந்தருளியுள்ள குருநாத சுவாமிமீது வரத பண்டிதரால் இயற்றப்பெற்றதாகும். இது தூதுப் பிரபந்த இலக்கணத்துக்கு அமைய கலிவெண்பாவாற் செய்யப்பட்டுள்ளது. 216 கண்ணிகளை கொண்ட இத்தூது கண்ணகியம்மன் கோபத்தாலுண்டாகும் அம்மைநோய் முதலியவற்றை ஆற்றவென உருவெடுத்த குருநாதன் பவனி கண்ட பெண்ணொருத்தி, அவன் மேலுற்ற காதலைத் தன் கிளிமூலஞ் சொல்லியனுப்பிக் ‘குருநாதர் மாலைதனை நீ வாங்கிவா’ எனக் கிள்ளையைத் தூதனுப்பிய கதையை கூறுமுகத்தாற் குருநாத சுவாமியின் சிறப்பினைச் சொல்வதாயமைந்துள்ளது. இந்நூலினை யாழ்ப்பாணத்து உடுவில் இரத்தினேஸ்வரஐயர் 1921இல் (இரண்டாம் பதிப்பாகப்) பதிப்பித்திருக்கிறார்கள். சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவரும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் இப்பதிப்பிற்கு சிறப்புப்பாயிரம் வழங்கியிருக்கிறார்கள். இந்நூல் 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் அச்சுருவில் மீள்பதிப்பாக, கலாநிதி க.இரகுபரனின் விரிவான முகவுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.