பாலசுகுமார். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.
22ஆவது வருடத்தை எட்டியுள்ள அனாமிகா வெளியீட்டகத்தினரின் 23ஆவது பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல் ஒரு பண்பாட்டின் அடையாளத்தை தனிமனிதர்களின் வரலாற்றோடு சமூக அடையாளமாக வெளிப்படுத்தியுள்ளது. ஈழத்தின் கிழக்கே திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமங்களுள் ஒன்று சேனையூர். இக்கிராமத்து மக்கள் சைவத்தையும் தமிழையும் தம்மிரு கண்களாகப் போற்றிவந்தவர்கள். இப்பிரதேச மக்கள் முறைசார்ந்த வழிபாடுகளையும் முறைசாரா வழிபாடுகளையும் பின்பற்றுகின்றனர். இவ்வகையில் பாரம்பரியமிக்க வழிபாடுகளில் சக்தி வழிபாடுகளான பத்தினியம்மன் வழிபாடு, அம்மச்சியம்மன் வழிபாடு, மாரியம்மன் வழிபாடு, பேச்சியம்மன் வழிபாடு, கும்பத்து அம்மன் வழிபாடு, என்பன குறிப்பிடத்தக்கவை. கும்பத்து அம்மன் வழிபாடு இப்பிரதேசத்தின் சிறப்பு வாய்ந்ததொன்றாகத் திகழ்கின்றது. குறிப்பாக புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை தொடங்கி நவமி ஈறாகவுள்ள நாட்கள் நவராத்திரி வழிபாட்டுக்குரிய காலமாகும். இவ்வழிபாட்டினை இக்கிராமத்தவர்கள் கும்பத்து அம்மன் வழிபாடு எனச் சிறப்புறச் செய்து வருகிறார்கள். இவ்வழிபாடு பற்றிய சமூகவியல் பார்வையாக எழுதப்பட்டுள்ள 14 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. சேனையூர் ஓர் அறிமுகம்/சேனையூரும் கும்பமும்/கும்பம் ஓர் பண்பாட்டியல் குறிப்பு/வித்தகர் விஜயசிங்கம் காளியப்பு/விற்பன்னர் காளியப்பு விஜயசிங்கம்/காளியப்பு பாலசிங்கம்/பல்கலைவேந்தர் வில்லுப்பாட்டு வீரசிங்கம்/கட்டைப்பறிச்சானில் கும்பம்/கல்லம் பாரில் கும்பம்/மருதநகரில் கும்பம்/தம்பலகாமத்தில் கும்பம்/திருக்கோணமலை நகரை அண்டிய பகுதிகளிலும் நகரிலும் கும்பவிழா/நினைவுகளின் சில வரிகள்/பின்னுரை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.