மனித உரிமைகள் காப்பு. ஐக்கிய அமெரிக்க நாடுகள்: மனித உரிமைகள் காப்பு, மீள் பிரசுரம், கொழும்பு 3: நடேசன் நிலையம், 31, சார்ள்ஸ் இடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (ராஜகிரிய: தர்ஷனா அச்சிட்டாளர், 26/3, சில்வா வீதி).
iv, 142 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 22×15 சமீ.
குடியியல் அரசியல் உரிமைகளைப் பேணுவதற்கு முன்னர் பொருளாதார வளர்ச்சியும் பசிப்பிணியை ஒழிப்பதுமே முதலிடம் பெறவேண்டும் என்பது பல அரசாங்கங்களின் வாதமாக உள்ளது. அதனை இந்த அறிக்கை ஏற்க மறுக்கின்றது. அதற்காக உலகின் பல பாகங்களிலிருந்தும் பல உதாரணங்களை மேற்கொள்காட்டியுள்ளது. குடியியல் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதால் மரணமும் பசி பட்டினியும் சுகக்குறைவும் முழுச் சமூகத்தையுமே பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இவ்வறிக்கை சரித்திரம், காணி, சுற்றாடல் பாதுகாப்பு, தொழில் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களை முக்கியமாகப் பரிசீலிக்கின்றது. இவற்றிற்கு உதாரணங்களாக, அரசிற்கு எதிரான அரசியற் கொள்கைகள் (கென்யா, பர்மா) காரணமாக நகர்ப்புறச் சேரிகளில் இருப்பவர்களை வெளியேற்றுதல், (எத்தியோப்பியா, மாலி, தென்னாபிரிக்கா) கிராமப்புற நாடோடிகளையும் இடம்பெயர் தொழிலாளர்களையும் கட்டுப்படுத்தி அவர்களின் வறுமையைத் தாங்கொணா நிலைக்குத் தள்ளுதல் என்பனவற்றைக் காட்டுகின்றது. தொழிற்துறையைப் பொறுத்தமட்டில் இவ்வறிக்கை அவர்களின் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்வதற்கான உரிமையானது, சிலவேளைகளில் நகர்ப்புற, கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சுற்றாடல்களை அபிவிருத்திசெய்துகொள்ளவும், வாழ்வாதாரத்திற்குப் பொதுமான சம்பளத்தை பெறுவதற்கும் உதவிசெய்யும் என இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. சுற்றாடலை நோக்குகையில் இன்றுள்ள பல்வேறு அவலங்களையும், அரசின் கொள்கைகளையும், நெறிமுறைகளையும் பொதுஜன விமர்சனத்திற்கு உட்படுத்துவதால் தவிர்த்திருக்க முடியும் என்பதையும் இவ்வறிக்கை நிரூபிக்கிறது.